மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் 58 தாழ்தள பேருந்துகள் சேவை: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

By செ.ஆனந்த விநாயகம்

சென்னை: மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் 58 தாழ்தள பேருந்துகள் உள்ளிட்ட 100 புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளின் இயக்கத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி இன்று (ஞாயிற்றுகிழமை) தொடங்கி வைத்தார்.

மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 611 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் முதல்கட்டமாக 58 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரப்பெற்றன. இதேபோல், 30 சாதாரண பிஎஸ் 6 பேருந்துகள், 12 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளும் இயக்கத்துக்கு தயாரானது.

அதன்படி, ரூ.66.15 கோடி மதிப்பிலான 100 புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, சென்னை, பல்லவன் சாலையில் உள்ள மத்திய பணிமனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி., சென்னை மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் தாழ்தள பேருந்துகளை பார்வையிட்டனர். நிகழ்வில், போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி, மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், இணை மேலாண் இயக்குநர் செ.நடராஜன், தொமுச பேரவை பொருளாளர் கி.நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேருந்துகளின் சிறப்பம்சம்:தாழ்தள பேருந்துகளில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் குறித்து மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் உட்பட அனைவரும் எளிதாக ஏறி, இறங்கும் வகையில் பேருந்தின் தளம் 400 மிமீ உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இறங்கு தளத்தின் உயரத்தை மேலும் 60 மிமீ குறைத்து (kneeling) பயணிகள் ஏறிய பிறகு, பழைய உயரத்துக்கு மாற்றிக் கொள்ளும் வசதியும் இடம்பெற்றுள்ளது. மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏறி, இறங்குவதற்கு சாய்தள வசதியும், சக்கர நாற்காலியிலேயே அமர்ந்து பயணிக்க தனி இடவசதியும் உண்டு. 35 சொகுசு இருக்கைகளுடன் 70 பேர் பயணிக்க முடியும். தானியங்கி கதவுகளை மூடினால் மட்டுமே பேருந்தை இயக்க முடியும்.

அடுத்த நிறுத்தத்தை முன்கூட்டியே அறிவிக்கும் ஒலிபெருக்கி மற்றும் எல்இடி திரை பொருத்தப்பட்டுள்ளது. இடவசதி அதிகமாக இருப்பதற்காக 12 மீட்டர் நீளமுடனும், காற்றோட்ட வசதிக்காக அகலமான ஜன்னல்கள் இடம்பெற்றவாறு பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது ஒருபுறமிருக்க பெண்களுக்கான கட்டணமில்லா பயணத் திட்டத்தில் மாநகரப் பேருந்துகளில் இதுவரை 102 கோடிக்கும் மேலான பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் குறுகிய சாலைகளில் பயணிக்க முடியாதது உள்ளிட்ட காரணங்களால் 6 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்ட தாழ்தள பேருந்து சேவை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE