நெல்லையில் ஆய்வுக்கு ஆட்சியர் வருகையில் தாமதம்: அமைச்சர் கே.என்.நேரு அதிருப்தி

By த.அசோக் குமார்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை பகுதியில் சீர்மிகு நகர திட்டத்தில் மகாத்மா காந்தி மார்க்கெட் பணிகள் ரூ.40.03 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இங்கு 420 கடைகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து பாளையங்கோட்டையில் ரூ.53.14 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம், வணிக வளாகம், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை பார்வையிட்டு அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் நூலகம், பொதுவான நிறுவனங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர்.

மேலும், ரூ.85.56 கோடி மதிப்பில் கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலைய வணிக வளாகத்தில் அருகில் உள்ள வணிக நிறுவனங்களின் வாடகைக்கு ஏற்ப வாடகை நிர்ணயம் செய்து, வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்கவும், அரசுத்துறை சார்ந்த நிறுவனங்களின் பயன்பாட்டுக்கும் ஒதுக்கீடு செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

அமைச்சர்கள் ஆய்வுப் பணியை தொடங்கியபோது, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அங்கு இல்லாததால் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு அமைச்சர் கே.என்.நேரு பேசினார். அப்போது, “நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று தெரிந்தால் நாங்கள் வந்து பார்ப்போம் அல்லவா?. இரண்டு அமைச்சர்கள் ஆய்வு செய்துகொண்டு இருக்கிறோம், ஆட்சியர் வராவிட்டால் எப்படி?, எங்கு இருக்கிறீர்கள், எப்போது வருவீர்கள்” என்று கேட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அவரிடம் தனது தரப்பு விளக்கத்தை ஆட்சியர் அளித்தார்.

பின்னர் தாமதமாக வந்த ஆட்சியர் கார்த்திகேயன், ஆய்வுப் பணியில் ஈடுபட்ட அமைச்சரிடம் தாமதத்துக்கான காரணத்தை விளக்கினார். ஆடி அமாவாசையையொட்டி காரையாறில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளதால் அங்கு செய்யப்பட்டுள்ள பணிகளை பார்வையிடச் சென்றுவிட்டு வருவதற்கு தாமதமானதாக கூறப்படுகிறது.

ஆய்வின்போது, சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் வகாப், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மேயர் (பொறுப்பு) கே.ஆர்.ராஜூ, சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE