ஆடி அமாவாசை | கும்பகோணம் மகாமக குளக் கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: ஆடி அமாவாசையொட்டி கும்பகோணம் காவிரி ஆறு மற்றும் மகாமக குளத்தின் கரையில் முன்னோர்களுக்கு உறவினர்கள் தர்ப்பணம் செய்தனர்.

தமிழ் மாதங்கள் தோறும் வரும் அமாவாசை விட ஆடி அமாவாசை மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதைத்தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஆக.4) ஆடி அமாவாசையையொட்டி கும்பகோணம் காவிரி ஆறு, மேலக்காவேரி, சக்கரப்படித் துறை, சாரங்கபாணி படித்துறை, பகவத் படித்துறை, டபீர் படித்துறை ஆகிய இடங்களில் பொதுமக்கள் தங்களது உறவினர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடினார்கள்.

இதேபோல் மகாமகக் குளக்கரையில் கும்பகோணம் பகுதிகளில் உள்ள கோயில்களில் தரிசனம் மேற்கொள்ள வந்த வெளிமாநிலத்தவர்கள் உள்பட உள்ளூர் பொதுமக்கள் ஏராளமானோர் புனித நீராடி தர்ப்பணம் செய்தனர். அந்தப் பகுதிகளில் பொதுமக்களுக்கு அசம்பாவிதம் ஏற்படாத வகையில் போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதேபோல் ஆடி அமாவாசையையொட்டி கும்பகோணம், காமராஜ் நகரில் உள்ள விஸ்வரூப ஜெய மாருதி ஆஞ்சநேயர் சுவாமி சாஹம்பரா எனும் 750 கிலோ எடையில் ஆன பல்வேறு காய்கறி வகையான அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர், அந்த காய்கறிகளை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE