எம்பிசி, சீர்மரபினர் 20% இடஒதுக்கீட்டால் வன்னியர்களுக்கே அதிக பயன்: ஆர்டிஐ சட்டத்தின்கீழ் தமிழக அரசு தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் தற்போதும் நடைமுறைப்படுத்தும், மிகபிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு மூலம் வன்னியர்கள் அதிகளவில் பயன்பெற்று வருவதாக தமிழக அரசு அளித்த தகவல் அறியும் உரிமைச்சட்ட தரவுகள் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது: கடந்த 2018 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் தமிழக மருத்துவக் கல்லூரிகளுக்கு மொத்தம் 24,330 மாணவர்களில் வன்னியர் சமுயதாயத்தைச் சேர்ந்தவர்கள் 2,781 மாணவர்கள். இது 11.4 சதவீதமாகும்.

தமிழக அரசு வழங்கிவரும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்கள் 10.5 சதவீதத்தைவிட கூடுதலாக 13.8 சதவீதம், அதாவது 3,354 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். மருத்துவ பட்டமேற்படிப்பு சேர்க்கையில் வன்னிய சமுதாய மாணவர்கள் மட்டும் 940 பேர் அதாவது, 13.5 சதவீத அளவில் சேர்க்கை பெற்றுள்ளனர். பிடிஎஸ் படிப்பில் வன்னியர்கள் 437 பேர் சேர்க்கப்பட்டனர். இது 10.7 சதவீதமாகும். எம்டிஎஸ் படிப்பில் உள்ள 751 இடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் 137 பேர் சேர்ந்துள்ளனர். இவர்களில் வன்னியர்கள் மட்டும் 66 பேர். இது 11.2 சதவீதமாகும்.

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுகளில் 2012-22 வரை தேர்ச்சி பெற்று நியமனம் பெற்ற 26,784 பேரில் வன்னியர்கள் மட்டும் 5,215 பேர். இது 19.5 சதவீதமாகும். குரூப்-2 தேர்வுகளில் நியமனம் பெற்ற 2,682 பேரில் வன்னியர்கள் 270 பேர். அதாவது 11.2 சதவீதமாகும். சீருடை பணியாளர் நியமன வாரியத்தில் 2013-22-ம் ஆண்டுகளில் 1919 காவல் உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் 17 சதவீதம் பேர் வன்னியர்கள்.

மேலும் 2013-22-க்கு இடையில் மருத்துவ சேவை நியமன வாரியத்தால் பணியமர்த்தப்பட்ட 8,379 உதவி அறுவை சிகிச்சை மருத்துவர்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டில் 1,433 பேர் நியமிக்கப்பட்டனர். இதில் 1185 பேர் வன்னியர்கள். அதாவது 17.1 சதவீதமாகும்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் 3,044 பேரில் 17.5 சதவீதம் அதாவது 383 பேர் வனனியர்கள். மேலும், 2023-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 542 துணை ஆட்சியர்களில் 63 பேர் அதாவது, 11.6 சதவீதத்தினர் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இதுதவிர, 2013-22ம் ஆண்டுகளில் 1,789 பொறியாளர்கள் நியமிக்கப்பட்டதில். 14.4 சதவீதம், அதாவது 258 பேர் வன்னியர்கள்.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ள புள்ளி விவரங்கள் அடிப்படையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் வன்னிய சமுதாயத்தினர் அதிகமாகவே பயனடைந்து வருகின்றனர் என்பதும் பாமககோரும் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டால் வன்னிய சமுதாயத்துக்கு குறைவான பயன்களே கிடைக்கும் என்பதும் தெளிவாகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராமதாஸ் எதிர்வினை: “இப்போது திடீரென வன்னியர்கள் குறித்த புள்ளிவிவரங்களை மட்டும் திரித்து வெளியிட்டிருப்பது ஏன்? வன்னியர்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைத்து விட்டது என்ற மாயையை ஏற்படுத்துவது தானே தமிழக அரசின் நோக்கம்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்கள் 10.50% விழுக்காட்டுக்கும் கூடுதலாக பிரதிநிதித்துவம் பெற்றிருப்பதாக தமிழக அரசு விளக்கமளித்திருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில புள்ளி விவரங்களை மட்டும் அரைகுறையாகவும், திரித்தும் வெளியிட்டிருப்பதன் மூலம் வன்னியர்களுக்கு இழைத்த துரோகங்களை மறைக்க திமுக அரசு முயன்றிருக்கிறது. திமுக அரசின் இந்த மோசடி கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க > “வன்னியர்கள் குறித்த புள்ளிவிவரத்தை மட்டும் திரித்து வெளியிட்டது ஏன்?” - அரசுக்கு ராமதாஸ் கேள்வி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE