காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்

By செய்திப்பிரிவு

திருச்சி: டெல்டா மாவட்டங்களில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்ததால், அவற்றின் கரையோரப் பகுதிகளில் ஏராளமானோர் நேற்று ஆடிப்பெருக்கு விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் சிறப்பு வாய்ந்த மாதம் என்பதால், அம்மன் கோயில்களில் அதிக அளவிலான உற்சவங்கள் நடைபெறும். அந்த வகையில், ஆடி மாதத்தின் 18-ம் நாள் ஆடிப்பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு காவிரி, கொள்ளிடம் மற்றும் கிளை ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளதால், ஆடிப்பெருக்கு விழாவையொட்டி நீர்நிலைகளில் பெண்கள் ஒன்றுகூடி, அரிசி, பழங்கள், பனையோலை, கருகமணி, மஞ்சள், மஞ்சள் கயிறு ஆகியவற்றை கரையோரங்களில் வைத்து, காவிரித் தாய்க்குப் படையலிட்டனர். மஞ்சள் கயிற்றை பெண்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். புதுமணத் தம்பதியர் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு, புதுத் தாலிக்கயிறு அணிந்துகொண்டனர்.

திருச்சியில் ஶ்ரீரங்கம் அம்மா மண்டபம், அய்யாளம்மன், கீதாபுரம், கருட மண்டபம், சிந்தாமணி உள்ளிட்ட காவிரி ஆற்றின்படித்துறைகளில் ஏராளமான பெண்கள் கூடி, வழிபாடு நடத்தினர். நடப்பாண்டு மேட்டூர் அணை நிரம்பி, உபரிநீர் 1.50 லட்சம் கனஅடி திறக்கப்பட்டுள்ளதால், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டு ஓடுகிறது. இதன் காரணமாக, ஆறுகளில் உள்ள படித்துறைகளில் மக்கள் சென்று விடாதவாறு, மாநகராட்சி சார்பில் 13 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

மாவட்டம் முழுவதும் மக்கள்வழிபாடு நடத்தும் 55 இடங்களை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து, அங்கு ஏராளமான போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றின் புஷ்ப மண்டப படித்துறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் காவிரி, கொள்ளிடம் ஆற்றங்கரைகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE