ராமேசுவரம்/சென்னை: இலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் மோதியதால் நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவரின் உடல் நேற்று ராமேசுவரம் கொண்டு வரப்பட்டது. அதேபோல, மீட்கப்பட்ட 2 மீனவர்களும் ராமேசுவரம் வந்து சேர்ந்தனர்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற விசைப்படகின் மீது இலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் மோதியதில், மீனவர் மலைச்சாமி (59) உயிரிழந்தார். மீனவர் ராமச்சந்திரன் (64) கடலில் மாயமானார். முத்து முனியாண்டி (57), மூக்கையா (54) ஆகிய 2 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், நடுக்கடலில் மாயமான மீனவர் ராமச்சந்திரனை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மலைச்சாமியின் உடலை யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்து, இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, உயிருடன் மீட்கப்பட்ட 2 மீனவர்கள் மற்றும் மலைச்சாமியின் உடலை நேற்று முன்தினம் இரவு காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து, இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்துப் படகில் அனுப்பி வைத்தனர்.
மீனவர் உடலுக்கு மரியாதை: சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடற்படையின் `ஐஎன்ஸ் பித்ரா' கப்பல் வீரர்கள் மலைச்சாமி உடலையும், மீட்கப்பட்ட மீனவர்களையும் பெற்றுக் கொண்டுவந்து, ராமேசுவரம் மீன்வளத் துறை உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெயிலானியிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து, மலைச்சாமியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ராமேசுவரம் வட்டாட்சியர் செல்லப்பா மலர்வளையம் வைத்து மீனவர் உடலுக்கு மரியாதை செலுத்தினார். உயிருடன் திரும்பிய 2 மீனவர்கள் விசாரணைக்குப் பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
21 மீனவர்கள் சென்னை வருகை: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 6 மீனவர்கள் என 21 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களது 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்எழுதினார். தொடர்ந்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்கள் 21 பேரையும் 2 தினங்களுக்கு முன்பு விடுதலை செய்தது. அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் 21 பேரும் கொழும்பிலிருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு சென்னை விமான நிலையம் வந்தனர்.
அவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு அனுப்பிவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago