சென்னை: கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா ரூ.30 கோடியில் புனரமைக்கப்பட்டு, கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவாக பெயர் மாற்றப்பட்டுள்ள நிலையில், அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆக.3) திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழகத்தின் இயற்கை சூழலை பாதுகாக்கவும், வனப்பரப்பை அதிகரிக்கும் நோக்கிலும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள செங்காந்தள் பூங்காவிற்கு அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் ‘கலைஞர் நூற்றாண்டு பூங்கா’ மற்றும் கோயம்புத்தூர், காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165 ஏக்கர் பரப்பளவிலான ‘செம்மொழிப் பூங்கா’ ஆகியவற்றிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அங்கு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா: சென்னையின் முக்கிய சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலங்களில் ஒன்று கிண்டி சிறுவர் பூங்கா. இங்கு ஆண்டுதோறும் 7 முதல் 8 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். மேலும், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகளைச் சேர்ந்த 60,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பூங்காவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். இந்நிலையில், 2022-23-ம் ஆண்டு பட்ஜெட்டில், கிண்டி சிறுவர் பூங்காவை மறுவடிவமைத்து, பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், விலங்குகள் உள்ளடங்கிய இயற்கைப் பூங்காவாக அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, வனம் மற்றும் வனவிலங்குகள் பற்றிய விழிப்புணர்வுவை சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு ஏற்படுத்த, தற்போதுள்ள கிண்டி சிறுவர் பூங்கா ரூ.30 கோடியில் புனரமைக்கப்பட்டு சிறுவர்களுக்கான இயற்கை பூங்காவாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
» இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த மீனவர் உடல் ராமேசுவரம் கொண்டுவரப்பட்டது
» காவிரி வெள்ளப்பெருக்கால் பாதிப்பு: நாமக்கல்லில் கரையோர பகுதியில் இபிஎஸ் ஆய்வு
திறப்பு விழாவில், வனவிலங்குகளை மீட்கவும், வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீ போன்ற விபத்துகளை தடுக்கவும், அனைத்து நிலப்பகுதிகளிலும் செல்லும் 9 நவீன வாகனங்களை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பின், கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில் வேடந்தாங்கல் பறவைகள் இருப்பிடத்தை திறந்து வைத்து, பூங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பல்வேறு வசதிகளை பார்வையிட்டார்.
தமிழகத்திலேயே முதன்முறையாக இந்தப் பூங்காவில் 2,800 சதுர மீட்டர் பரப்பளவில் மிகப்பெரிய நீர்வாழ் பறவைக் கூடம், வன உயிரின விழிப்புணர்வு மையம், விலங்குகள் மற்றும் பறவைகளின் விவரங்கள் அறிந்துகொள்ளும் வகையிலான எல்இடி மின் திரைகள், நூலகம், நிர்வாக கட்டடம், அழகிய நுழைவுவாயில், நீருற்றுகள், செல்ஃபி பாயின்ட், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி, மழை நீர் வடிகால் வசதிகள், நடைபாதைகள், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பார்வையாளர்களுக்கு உணவு மற்றும் சிற்றுண்டி கிடைக்கும் வகையில் நவீன கட்டமைப்புடன் இரண்டு சிற்றுண்டி கூடங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள், புதிய கழிவறைகள், மேம்படுத்தப்பட்ட வாகனம் நிறுத்துமிடம் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு ஏற்ற வகையில் அவர்களின் தேவைகள் அறிந்து இப்பூங்காவில் சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், எம்.மதிவேந்தன், மேயர் ஆர்.பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, வனத்துறை செயலர் பி.செந்தில்குமார், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சுதான்சு குப்தா, வனத்துறை தலைவர் சீனிவாஸ் ஆர்.ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago