சென்னை - காட்பாடி இடையே வந்தே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது

By எம். வேல்சங்கர்

சென்னை: சென்னை - காட்பாடி இடையிலான முதல் வந்தே மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கியது.

சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் ஆலையில் வந்தே பாரத் ரயில், அம்ரித் பாரத் ரயில் (சாதாரண் வந்தே பாரத் ரயில்), வந்தே மெட்ரோ ரயில் ஆகிய ரயில்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இவற்றில் ஒன்றாக, முதல் வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணி கடந்த மாதம் முடிந்தது.

12 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் ஏசி வசதி, பயணிகளை கவரும் வகையில் உள் அலங்காரம், சொகுசு இருக்கைகள் போன்ற அடிப்படை வசதிகள் இடம்பெற்றுள்ளன. கண்காணிப்புக் கேமரா, அதிநவீன கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 104 பேர் அமர்ந்து செல்லலாம். 200 பேர் நிற்க முடியும். அதிக பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையில், உள்வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, ஐசிஎஃப் ஆலையில் இந்த ரயிலில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத்தொடர்ந்து, இந்த ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை - காட்பாடி இடையே இன்று (ஆக.3) காலை தொடங்கியது. இந்த ரயில் வில்லிவாக்கத்தில் இருந்து இன்று காலை 8.15 மணிக்கு புறப்பட்டு, காலை 9.00 மணிக்கு சென்னை கடற்கரையை அடைந்தது. தொடர்ந்து, அங்கிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, வில்லிவாக்கத்தை காலை 10 மணிக்கு அடைந்தது.

அங்கு ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர அமைப்பு உயரதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு ஆணையர், ஐசிஎஃப் அதிகாரிகள் ஆகியோர் ரயிலில் ஏறினார். தொடர்ந்து, வில்லிவாக்கத்தில் இருந்து காலை 10.15 மணிக்கு அந்த ரயில் புறப்பட்டது. இந்த ரயில் அரக்கோணம் வழியாக காட்பாடியை 11.55 மணிக்கு அடையும். காட்பாடியில் இருந்து பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2 மணிக்கு சென்னை கடற்கரையை அடையும்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “ரயில்வே வாரியத்தின் உத்தரவின் பேரில், சென்னையில் முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. வந்தே மெட்ரோ ரயலின் வேகம், சிக்னல் தொழில்நுட்பம், ரயில் நிலையங்களில் நடைமேடைகளில் சரியாக நிற்கிறதா உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த ரயிலை எந்த வழித்தடத்தில் இயக்குவது என்பது குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை” என்றனர்.

சோதனை ஓட்டத்தின்போது, மணிக்கு 160 கி.மீ. வேகம் வரை ரயிலை இயக்கி பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE