தீராத களங்கத்தை ஏற்படுத்திய தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: விதிமுறைகள் என்ன சொல்கின்றன?

By டி.எல்.சஞ்சீவி குமார்

சமீபக் காலத்தில் தமிழகக் காவல் துறை வரலாற்றில் சமூக விரோதிகள் மீதுகூட இவ்வளவு பெரிய துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது இல்லை. ஆனால், தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது காவல் துறை நடத்திய இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழ கக் காவல் துறையின் மீதும் தமிழக அரசின் மீதும் அழியாத களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகக் காவல் துறைக்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் புதியதல்ல. 1957-ல் முதுகுளத்தூர் கலவரத்தில் போலீஸார் துப்பாக்கிசூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர். தமிழகக் காவல் துறையில் 1970-களின் இறுதி வரை ‘மலபார் ஸ்பெஷல் போலீஸ்’ என்கிற அவசரப் படை, கலவரங்களை அடக்குவதற்கென்றே அமைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட இது ராணுவப் படைப் போலவே செயல்பட்டது. ராணுவத்தினரை போலவே தனி சீருடை, அரைக்கால் டவுசர், இரும்புச் சட்டி தொப்பி, இரும்புக் கேடயம், இரும்பு பூண் பூட்டப்பட்ட ஈட்டி மர லத்தி, கண்ணீர் புகை ‘கிரினேடு’ கன், ‘303’ ரக துப்பாக்கி தோட்டாக்கள், எல்.எம்.ஜி. துப்பாக்கி கன், ஸ்டென் கன் சகிதம் எந்நேரமும் தயாராக இருக்கும் மலபார் போலீஸ் படை தேவைப்பட்டால் நேபாளம் வரை சென்று கலவரங்களை அடக்கியது.

இந்தப் பிரிவு ஒரு பட்டாலியனுக்கு 750 பேர் கொண்ட குழுவாக பிரிக்கப்பட்டு ஒரு தலைமை கமாண்டண்ட் - தளவாய் என்கிற பொறுப்பாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் கீழ் ‘கம்பெனி’ என்கிற படைப் பிரிவு பிரிக்கப்பட்டு ஒவ்வொரு படையிலும் 120 பேர் நியமிக்கப்பட்டனர். முதல் பட்டாலியன் படை திருச்சி தொடங்கி முறையே ஆவடி, வீராபுரம், கோவைப் புதூர், ஆவடி எம்.எம்.நகர் (மகளிர் பட்டாலியன்), மதுரை, போச்சம்பள்ளி, டெல்லி - திஹார் சிறை பாதுகாப்பு பட்டாலியன், மணிமுத்தாறு, உளுந்தூர்பேட்டை, ராஜபாளையம், பழநி, சுந்தரம்பள்ளி, வீராபுரம் என சுமார் 15 இடங்களை மையமாக கொண்டு செயல்பட்டது. கிட்டத்தட்ட ஆங்கிலேய அரசாங்கம் சுதந்திரப் போராட்டங்களை அடக்க கையாண்ட மூர்க்கத்தனமான வழிமுறைகளையே இவர்களும் கையாண்டனர்.

1971-ல் கோபாலசாமி அய்யங்கார் தலைமையில் போலீஸ் சீர்த்திருத்த கமிஷன் அமைக்கப்பட்டு, மேற்கண்ட மூர்க்கத்தனமாக தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு, மலபார் பிரிவும் கலைக்கப்பட்டது. ஆனால், அதன் பின்பும் காவல் துறையின் அடக்குமுறைகள் குறையவே இல்லை. மெரினா கடற் கரையை அழகுப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு, மின் கட்டணத்தை குறைக்கக் கோரி நாராயணசாமி தலைமையில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு, அருப்புக்கோட்டை அருகே வாகைக்குளத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு, திருச்சி சிம்கோ மீட்டர் ஆலைத் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு, வியாசர்பாடி துப்பாக்கிச் சூடு என நிறைய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்தன. மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் நிறையப் பேர் இறந்தார்கள்.

இதன் பின்பு மனித உரிமை அமைப்புகள் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாக காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான தெளிவான நிர்வாக நடைமுறை விதிகள் வகுக்கப்பட்டன. இதற்கு ‘மாப் ஆபரேஷன்’ என்று பெயரிடப்பட்டது. இதன் விதிமுறைகளின்படி முதலில் சட்டவிரோதமாகக் கூடியிருக்கும் கூட்டத்துக்கு முன்னதாக 500 மீட்டர் தூரத்தில் காவல் படையினர் அணிவகுத்து நிற்க வேண்டும். முன்வரிசையில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை கையாளும் அணியினரும், அடுத்த 3 வரிசைகளில் ‘லத்தி சார்ஜ்’ அணியினரும், அடுத்த வரிசையில் குறைவான எண்ணிக்கையிலான துப்பாக்கி ஏந்திய அணியினரும், இறுதி வரிசையில் முதலுதவி அணியினரும் இருக்க வேண்டும். முன்னறிவிப்பாக மைக்கில் எச்சரித்து, எச்சரிக்கை கொடியை உயர்த்திப் பிடிக்க வேண்டும். அப்போதும் கலைந்து போகாவிட்டால் கண்ணீர்ப் புகைகுண்டுகளைத் தரையில் படும்படியாக 45 டிகிரி கோணத்தில் வைத்துச் சுட வேண்டும்.

தொடர்ந்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ரப்பர் குண்டுகளையும் வீசலாம். அதன் பின்பு லத்தி சார்ஜ். அப்போதும் கலவரம் அடங்கவில்லை என்றால் துப்பாக்கி அணியினர் இரு வரிசையாக சிறிது முன்னேறி, துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்புவார்கள். காவலர் ஒருவர் 5 அடி முன்னால் சென்று மீண்டும் எச்சரிப்பார். இதன் பின்பே அதிகாரி குறிப்பிட்ட ஒரு காவலரிடம் கூட்டத்தில் இருக்கும் குறிப்பிட்ட ஒரு ஆளை (முக்கிய நபர்) மட்டும் காலில் சுடும்படி உத்தரவிடுவார். அந்த நபர் சுடப்பட்டதும் கூட்டம் கலைந்து ஓடும் என்பது காவல் துறையினரின் கணிப்பு. அதன் பின்பு உடனடியாக முதலுதவி அணியினர் முன்னேறிச் சென்று குண்டடிப் பட்ட நபருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த நடைமுறைகள் இப்போது பின்பற்றப்படுவது இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்