மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.10 லட்சம் கனஅடியாக குறைந்தது

By செய்திப்பிரிவு

மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து நேற்று இரவு விநாடிக்கு 1.10 லட்சம் கனஅடியாக குறைந்த நிலையில், உபரிநீர் முழுவதும் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பியதால், உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகளில் இருந்து 1 லட்சம் கனஅடிக்கும் கூடுதலாக உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

மேட்டூர் அணை கடந்த 30-ம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1.70 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஆனால், நேற்று காலை முதல் நீர்வரத்து படிப்படியாக குறைந்து மாலை 1.30 லட்சம் கனஅடியாகவும், இரவு 8 மணியளவில் 1.10 லட்சம் கனஅடியாகவும் குறைந்தது. அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

எனினும், 1 லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால், காவிரிக் கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் கரையோரப் பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ட்ரோன் மூலம் நாய்க்கு உணவு: மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேறும் பகுதியில், ஆற்றின் நடுவே சிறிய மண் திட்டு உள்ளது. இதில் சிக்கிக் கொண்ட நாய் ஒன்று, கடந்த 2 நாட்களாக தவித்து வருகிறது. இதையடுத்து, சேலம் ஆட்சியர் பிருந்தா தேவியின் உத்தரவின்பேரில், ட்ரோன் மூலமாக நாய்க்கு உணவுவழங்கப்பட்டது. மேலும், நாயைமீட்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில்நேற்று முன்தினம் மாலை நீர்வரத்து விநாடிக்கு 2 லட்சத்து 5 ஆயிரம் கனஅடியாக இருந்தது.நேற்று காலை 1.70 லட்சம் கனஅடியாகவும், மாலை 1.35 லட்சம் கனஅடியாகவும் குறைந்தது.

படிப்படியாக குறையும் நீர்வரத்து: கர்நாடகா மாநில அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் நீர்வரத்துபடிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனால், ஒகேனக்கல் நாட்றாம்பாளையம் சாலையில் நாடார் கொட்டாய் பகுதியில் சாலையை மூழ்கடித்த வெள்ளம்தற்போது வடியத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, அந்த சாலையில் நிறுத்தப்பட்ட போக்குவரத்து நேற்று மீண்டும் அனுமதிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE