அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு: காவிரி கரையோர ஆட்சியர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்

By செய்திப்பிரிவு

சென்னை: காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து, சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தமுதல்வர் மு.க.ஸ்டாலின், காவிரிகரையோர மாவட்ட ஆட்சியர்களிடம் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, கர்நாடக அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து 1.50லட்சம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.இதனால், காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரத்தில் பாதிக்கப்படும் மக்கள் தற்போது வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று சென்னைசேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போதுவருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா,வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், வருவாய்த் துறைசெயலர் பெ.அமுதா ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆய்வின்போது, முதல்வரிடம் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கைகள், காவிரி கரையோரப் பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த் துறை அமைச்சர், வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோர் விளக்கினர். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், காவிரிக்கரையோரத்தில் உள்ள 7 மாவட்ட ஆட்சியர்களிடம் அங்குள்ள நிலைமை குறித்து கேட்டறிந்தார்.

மேட்டூர் அணையில் இருந்துஅதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்புகருதி, 1.54 கோடி செல்போன்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையைசேர்ந்த 470 வீரர்கள் நீலகிரி, கோவை, திண்டுக்கல், மயிலாடுதுறை, திருச்சி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொதுமக்களுக்கு எந்த சிரமமும் இல்லாத வகையில் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆற்றங்கரையோரம் ஆயிரக்கணக்கான மக்கள் செல்வார்கள் என்பதால், பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தாண்டு பேரிடர், வெள்ளம் குறித்து முன்னெச்சரிக்கையாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 20 மையங்களை தேர்வு செய்து, மக்களுக்கு தேவையான பொருட்கள், மோட்டார் பம்புகள் ஆகியவை தேவையான பணியாளர்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE