யார் வேண்டுமானாலும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதலாம்: சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ் தரும் ஆலோசனைகள்

By மு.அப்துல் முத்தலீஃப்

ஏழை, நடுத்தர மாணவர்கள் கூட ஐஏஎஸ் தேர்வை எழுதலாம் என சாதாரண கிராமத்திலிருந்து ஐஏஎஸ் தேர்வில் வென்று சாதித்த சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ் ஆலோசனைகள் தருகிறார்.

நேற்றைய அவரது பேட்டியின் தொடர்ச்சியாக வாசகர்களின் பல்வேறு சந்தேகங்களை அவர்களது கோணத்திலிருந்து சிவகுருவிடம் கேட்டபோது அவர் அளித்த பதில்கள்:

சாதாரணமாக கிராமத்தில் உள்ள ஒரு இளைஞர் ஐஏஎஸ் படிக்க ஆசைப்படுகிறார். அதற்கு உங்கள் ஆலோசனை என்ன?

இதைப் பொதுவான ஒன்றாக சொல்கிறேன். எல்லோருமே ஐஏஎஸ் ஆக வேண்டும், வேறொரு நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதை விட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும். எல்லா இளைஞர்களும் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை வைத்திருப்பார்கள். அப்படி குறிக்கோள் இல்லாவிட்டாலும் கூட ஒரு சில விஷயங்களை தெரிந்துகொள்வதன் மூலம் அந்த குறிக்கோளை வளர்த்துக்கொள்ளலாம்.

பிறகு ஏன் குறிக்கோளை நிறைவேற்ற முடியவில்லை?

அந்த குறிக்கோளைச் செய்வதற்கு ஏன் எல்லோரும் தோற்றுப்போகிறார்கள் என்றால் அதற்கான முயற்சிகளை செய்வதில்லை. அதன் தேவைகளை தேடிப் போவதில்லை. நமக்கான தகவலைத் தேடிப் போக வேண்டும். அப்படிப் போனால் அடுத்தகட்ட தொடர்ச்சியான வாய்ப்புகள் நமக்கு தானாக கிடைக்கும்.

எல்லோருக்கும் அப்படிப்பட்ட சூழ்நிலை அமையுமா? விதிவிலக்கைப் பொதுவாக சொல்ல முடியுமா?

அதைத்தான் சொல்கிறேன். உங்களுக்கு என்று ஒரு குறிக்கோள் இருக்கும். அதைத் தேடிப் போக வேண்டும். எந்த லெவலுக்குப் போகணுமோ அதுவரை போகவேண்டும். எந்த இடத்தில் தொய்வு விழுகிறதோ அங்கு நமக்கான அடுத்த தொடர் கிடைக்காது. இங்கு நான் குறிப்பிடுவது நமக்கான சோர்ஸ்.நமக்கு சின்னதாக ஒரு நூல் மாதிரி தான் தொங்கவிடுவார்கள். அதை கயிறாக மாற்றுவதோ, அறுத்து விட்டு வருவதோ நம் கையில் தான் உள்ளது.

கொஞ்சம் உதாரணத்துடன் சொல்ல முடியுமா?

எல்லோருக்குமே அந்த நூல் தொங்கவிடப்படும். எவ்வளவோ பேர் நம்மைத் திட்டினாலும், இதைச் செய்ய முடியாது என்று சொன்னாலும் யாரோ ஒருவர் ஒரு நூலை தொங்கவிட்டுத்தான் செல்வார். அதைக் கயிறாக மாற்ற வேண்டும் என்பதை இளைஞர்களுக்கும், நண்பர்களுக்கும் சொல்கிறேன்.

எனக்கு ஒரு நண்பர் சென்னையில் ஐஐடியில் சேர வாய்ப்புள்ளது என்று ஒரு நூலைத்தான் தொங்கவிட்டார். அவர் என் கையைப்பிடித்து சென்னைக்கு அழைத்து வரவில்லை. ஆனால் சென்னைக்கு வந்து முதல் நூலைப்பிடித்தேன். அதன் பின்னர் கிடைத்த அனுபவங்கள் அடுத்தடுத்த நூல் கிடைத்தது. இங்கு உங்களுக்கு சொல்ல வருவது ஒரு நூலைப்பிடித்து ஏறினால் கட்டாயம் அடுத்தவர் இன்னொரு நூலைப் போடுவார். வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்த வேண்டும்.

ஆர்வம் இருக்க வேண்டும், சரியாகச் செய்ய வேண்டும். ஆர்வமும், தேடலும் தான் நமது வெற்றிக்கு முதல் படி.

ஒரு மாணவர் பட்டம் வாங்கிவிட்டார், சிவில் சர்வீஸ் ஆர்வம் உள்ளது என்ன செய்ய வேண்டும்?

ஒரு இளைஞர் சிவில் சர்வீஸ் படிக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தால், முதலில் அவர் எங்கிருக்கிறார். கிராமம் அல்லது சென்னை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். முதலில் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். கிராமத்தில் இருக்கிறேன் பணமே இல்லை என்றால் அந்த சூழ்நிலையை சரியாக புரிந்துகொள்ள வேண்டும். சென்னை வந்து கஷ்டப்படக்கூடாது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் இலவச கோச்சிங் தரும் மனித நேயம் போன்ற அறக்கட்டளைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எங்கெல்லாம் இலவச வகுப்பு உள்ளதோ அதைப் பயன்படுத்த வேண்டும். அதற்கான நுழைவுத்தேர்வை கட்டாயம் எழுதி வாய்ப்பை பயடன்படுத்த வேண்டும். ஆனால் எனக்கு கிடைத்த அனுபவம் ஆர்வம் உள்ளவர்கள்கூட நுழைவுத்தேர்வு எழுதத் தயங்குகின்றனர். பிறகு எப்படி நீங்கள் உள்ளே நுழைய முடியும்?

மனத்தடைகளை உடைக்க எப்படி செயல்பட வேண்டும்?

நுழைவுத்தேர்வை எழுதி அவர்கள் வகுப்புக்கு கூப்பிடும் போது அந்த உரிய நேரத்துக்கு சரியாக சென்று ஈடுபாட்டுடன் வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும். படிக்க ஆரம்பித்து கவனமுடன் பின்பற்ற வேண்டும். படிக்க வேண்டியதை கட்டாயம் கவனத்துடன் படிக்க வேண்டும்.

நிறைய பாடங்களைப் படிக்க வேண்டுமா?

அப்படி கிடையாது, ஓவராக மெட்டீரியலை ஏற்றிக்கொள்ளக்கூடாது. இருக்கிற மெட்டீரியலை நன்றாகப் படித்து அதை திரும்ப திரும்ப ரிவைஸ் செய்து, ரிவைஸ் செய்து படிக்க வேண்டும். மூன்று முக்கிய விஷயங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.1. படிக்க வேண்டும், 2.டெஸ்ட் எழுத வேண்டும், 3. ரிவைஸ் பண்ண வேண்டும், இதுதான் முக்கியம். படிப்பு, எழுத்துத் ட்தேர்வு, ரிவைஸ் செய்துகொண்டே இருக்க வேண்டும். இதை செய்தாலே வெற்றி நிச்சயம்.

ஆங்கிலம் தெரியாத நபர் சிவில் தேர்வில் வெற்றிபெற முடியாதா?

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு ஆங்கிலம் அவசியம், ஆரம்பத் தேர்வை புரிந்துகொள்ள, எழுத கட்டாயம் ஆங்கிலம் தேவை. முக்கியத் தேர்வுக்கு முந்தைய சிசாட் எனப்படும் திறனறியும் தேர்வுக்கு (CSAT) ஆங்கிலம் தேவை. மெயின் தேர்வுக்கு ஆங்கிலம் தேவை இல்லை. தமிழில் எழுதலாம்.

ஆங்கிலம் தெரியாமல் இருப்பது பிரச்சினை இல்லை. தெரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் குற்றம். ஆங்கிலத்தில் வீக்காக இருந்தால் பரவாயில்லை ஆறுமாதத்தில் முன்னேறி விடலாம். தினம் 15 வார்த்தைகளை எழுதிப் பழக வேண்டும். இப்படியே செய்தால் நீங்கள் ஆங்கிலத்தில் தேறிவிடலாம். நான் அப்படித்தான் செய்தேன். மேலும் சில பேப்பர்கள் ஆங்கிலத்தில் தான் வரும். ஆகவே ஆங்கிலம் ஓரளவு கட்டாயம் தேவை.

சாதாரண நடுத்தர, ஏழ்மை நிலையில் உள்ள குடும்ப வருவாய் உள்ள ஒருவருக்கு சிவில் சர்வீஸ் தேர்வு பெரிய செலவா?

ஒரு காலத்தில் சிவில் சர்வீசுக்கு படிப்புச்செலவு அதிகமாக இருந்தாலும், இன்றும் பல இன்ஸ்டிட்யூட்டுகள் அதிக அளவில் பீஸ் வாங்கும் சூழ்நிலை உள்ளது. அதை நான் மறுக்கவில்லை ஆனால் செலவு அதிகம் என்கிற நிலை இன்று இல்லை என்று தான் சொல்வேன்.

இன்று எப்படி சூழ்நிலை மாறி உள்ளது என்றால், டிஜிட்டல் மெட்டீரியல் வந்துவிட்டது. இ-மெட்டீரியல் வந்துவிட்டது. ஐஏஎஸ் படிக்கத் தேவையான அத்தனை மெட்டீரியலும் இ-மெட்டீரியலாக இலவசமாகக் கிடைக்கிறது. டெலிகிராமில் இதற்கென்று ஒரு குரூப்பே உள்ளது.

தேர்வை எழுதும் முன்னர் நீங்கள் கேள்வித்தாளைப் பெற்று பதிலளிக்கும் (test series) முறைகூட தற்போது ஆன்லைனிலேயே வந்துவிட்டது. ஆனால் சில வெப்சைட்டுகளில் 5000 ஆயிரம் ரூபாய் வரை கேள்வித்தாளை பெற்று பதிலளிக்கும் (test series) முறை கிடைக்கிறது. டிஸ்கஷன் உட்கார இந்த டெஸ்ட் சீரிஸ் அவசியம்.

அப்படியானால் செலவு எங்கு ஆகிறது?

வகுப்புக்குத்தான் செலவு அதிகமாகும். வகுப்புக்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை வாங்குகின்றனர். அதற்கு நீங்கள் இலவசமாக வகுப்பு நடத்தும் மனிதநேயம் போன்ற வகுப்புகளில் நுழைவுத்தேர்வு எழுதி இலவசமாக படிக்கலாம். அங்கு எந்த வகுப்பாவது நன்றாக இல்லை என்று தோன்றினால் அதற்கென்று தனி சப்ஜெக்டுக்கு இருக்கும் ஆசிரியரை ரூ.5000 வரை தனியாக பீஸ் கொடுத்து கற்கலாம்.

இப்படி தனியாக வகுப்பெடுக்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்களா?

இருக்கிறார்கள், நான் பொருளாதாரத்துக்கு தனியாக ஒரு ஆசிரியரிடம் படித்தேன். அதற்கான தேடலும் இருக்கவேண்டும். எல்லாவற்றையும் ஒரே இடத்தில் எதிர்பார்க்க முடியாது. ஆகவே தனியாக சில சப்ஜெக்டுக்காக அதற்கென உள்ள ஆசிரியரிடம் படிக்கலாம்.

சிவில் சர்வீஸ் தேர்வு எழுத என்ன வகையான டிகிரி படிக்க வேண்டும்?

நீங்கள் எந்த வகையான டிகிரி எடுக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. ஆனால் கல்லூரியில் எந்த டிகிரி தேர்வு செய்தாலும் அதில் விருப்பத்துடன் அதைப் படிக்க வேண்டும். நீங்கள் கல்லூரியில் படிப்பது ஒரு சிலபஸ், சிவில் சர்வீசில் முக்கிய ஒரு சிலபஸ் வேறு ஒன்றாக இருந்தால் 3 ஆண்டுகள் வீணாகப் போய் விடும்.

அதனால் கல்லூரியில் படிக்கும்போதே சிவில் சர்வீஸ் தேர்வுக்கான சிலபஸையும் சேர்த்தே படிக்க வேண்டும். இரண்டையும் ஒரே சிலபஸாக ஒன்றாக கொண்டுசெல்ல வேண்டும். அதைக் கல்லூரி பாடத்துடனே இலகுவாக எடுத்துப் படித்தால் சுலபம். கல்லூரி படிப்பு வேறு, சிவில் சர்வீஸ் படிப்பு வேறு. ஆனால் இரண்டையும் ஒன்றாக கொண்டுசெல்ல வேண்டும்.

கல்லூரி காலத்திலேயே கூடுதலாகப் படித்தால் இலகுவாக சிவில் தேர்வு எழுதலாம். கூடுதல் முயற்சி எடுத்துதான் ஆகவேண்டும். அது முக்கியம். கல்லூரியிலேயே பதிலைக்கூட யூபிஎஸ்சி தரத்துக்கு எழுதப் பழக வேண்டும்.

கூடுதல் முயற்சி என்றால் எதைக் குறிப்பிடுகிறீர்கள்? படித்துக்கொண்டே இருக்க வேண்டுமா? தேர்ந்தெடுத்து படிக்க வேண்டுமா?

கூடுதல் முயற்சி என்றால் என்னவென்றால், சாதாரணமாக ஒருவர் படித்துகொண்டே இருக்கிறார், ரிவைஸ் செய்வதில்லை. இப்படிப் படித்துக்கொண்டே போவதால் ஒரு பயனும் இல்லை. ஆனால் படிக்க வேண்டும், அதை ரிவைஸ் செய்ய வேண்டும், எழுதிப்பார்க்க வேண்டும். இப்படிச் செய்வதால் எளிதாக எதையும் கடந்து போகலாம். இதை பெரும்பாலானோர் செய்வதில்லை என்பது தான் பிரச்சினையே.

கூடுதல் முயற்சி என்பது பெரிதாக ஒன்றுமில்லை, படிக்கணும் ரிவைஸ் செய்யணும், எழுதிப்பார்க்கணும். இது சாதாரணமாகச் செய்ய வேண்டியது. இதை செய்யாததால் திரும்பிப் பார்க்கும்போது கடல் மாதிரி தெரியும்.

நன்றாக எழுதிப்பார்க்க வேண்டும், மஸில் மெமரி என்பார்கள். மூளை தவறைச் செய்தாலும் கை சரியாக எழுதும், அந்த அளவுக்கு தயாராக வேண்டும். அது கூடுதல் முயற்சிதான். 3 மணி நேரத்தில் என்ன கேட்கப் போகிறார்கள் என்று தெரியாது. அதற்கும் சேர்ந்து தயார்படுத்திச் சென்றால் இலகுவாக முதல் முயற்சியிலேயே பாஸாகலாம்.

கல்லூரிப் பருவத்தில் கூடுதலாக எப்படித் தயாராவது?

கல்லூரியில் படிக்கும்போதே கிடைத்ததைப் படிக்க வேண்டும். கல்லூரியில் நீங்கள் சிலபஸுடன் கூடுதலாக படிப்பதும் நான் கூறிய பயிற்சிகளையும் எடுத்து வரவேண்டும். தினமும் இரண்டு மணி நேரம் இதற்காக ஒதுக்கினால் போதும். அல்லது குறைந்தபட்சம் ஆங்கில அறிவையாவது வளர்த்துக்கொள்ள வேண்டும்.

முதல் முயற்சியிலேயே வென்றார் என்கிறார்களே எப்படி?

அது உண்மையில்லை, முதல் முயற்சி என்பதே நான் சொன்னதுதான். கல்லூரி காலத்திலிருந்தே தயார் ஆவதுதான். இப்போதுகூட 19 வயதில் படிக்கும் ஒருவர் முதல் வருடம் படிக்கிறார், இரண்டாம் ஆண்டு படிக்கிறார், மூன்றாம் ஆண்டும் இதற்காக படிக்கும் போது அவர் 21 வயதில் அதற்கான வயதை எட்டி சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும்போது முதல் முயற்சியிலேயே வெல்கிறார். இதை முதல் முயற்சியில் வென்றார் என்று சொன்னாலும், அதற்குப் பின்னால் அவர் கல்லூரி காலத்திலேயே படித்து தயாராகி வருகிறார் என்றுதான் அர்த்தம்.

முதுகலைப்பட்டம் முடிந்து பின்னர் சிலர் தேர்வு எழுத வருகிறார்களே?

சிலர் கல்லூரியில் அனைத்து பட்டங்களும் பெற்ற பின்னர் நேரடியாக இங்கு பயிற்சிக்காக வரும்போது அவர்கள் தேர்வில் வெற்றிபெற சிரமமப்படுகிறார்கள் அல்லது தோல்வி அடைகிறார்கள். இதற்கு காரணம் நான் சொன்ன அம்சங்கள்தான். இந்தத் தேர்வை இலகுவாக சரியான முன்னேற்பாட்டுடன் கூடிய பயிற்சியுடன் எழுதலாம், ஆனால் முயற்சி முக்கியம். புத்திசாலித்தனமாகவும், கூடுதல் முயற்சியுடனும் செயல்பட்டால் நீங்களும் ஒரு ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகலாம்.

சிவில் தேர்வுகள் குறித்த வெற்றிபெற்றவர்கள் தரும் கூடுதல் டிப்ஸ்கள் தொடரும்…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்