திராவிட மாடல் ஆட்சியின் மகத்தான வெற்றியே உள்ஒதுக்கீடு தீர்ப்பு: தமிழக அரசு

By கி.கணேஷ்

சென்னை: அவசர கோலத்தில் நிறைவேற்றாமல், எந்த ஒரு சட்டத்துக்கும் காரணங்களை ஆராய்ந்து, தரவுகளை தொகுத்து குழு அமைத்து, பரிந்துரைகள் பெற்று நிறைவேற்றி சாமானிய மக்களுக்கு உரிய பயன்களை அளிப்பதால், திமுக அரசின் சட்டம் எப்போதும் வெற்றி பெற்று வருகிறது என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: ''சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் அருந்ததிய மக்களின் அவல வாழ்வை அகற்ற மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கடந்த 2008-ம் ஆண்டில் திட்டமிட்டார். அதன் தொடர்ச்சியாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் தலைமையில் குழு அமைத்தார். அக்குழுவின் பரிந்துரைப்படி, அருந்ததி இன மக்கள் முன்னேற்றத்துக்கு சிறப்பு சலுகைகள் அவசியம் என கருதி, ஆதிதிராவிடர்களுக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில், 3 சதவீதம் அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க 2008-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி தமிழக அமைச்சரவை முடிவெடுத்தது.

அதன்படி, சட்டம் இயற்ற முனைந்தபோது கருணாநிதிக்கு உடல் நலம் குன்றி, அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேர்ந்தது. அப்போது அவர் அறிவுரைப்படி, தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், அருந்ததியினருக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை பேரவையில் 2009 பிப்ரவரி 26-ம் தேதி அறிமுகம் செய்து, நிறைவேற்றினார். தொடர்ந்து 29-ம் தேதி விதிகள் உருவாக்கப்பட்டு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், அருந்ததியினருக்கான 3 சதவிகித உள் இட ஒதுக்கீட்டினை எதிர்த்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதில், 2020-ம் ஆண்டு தமிழக அரசின் அருந்ததியினர் உள் ஒதுக்கீடு சட்டம் செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் ஏற்கெனவே, 2004-ம் ஆண்டில் உள் இட ஒதுக்கீட்டை அனுமதிக்கக் கூடாது என்று ஆந்திர மாநில வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தது. அதன் காரணமாக, அருந்தியினருக்கு 3 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான 7 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.

இதில், பட்டியலின பழங்குடியினருக்கான உள் இட ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும். அருந்ததியினர் உள் இட ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று 6 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பினை கடந்த ஆக.1-ம் தேதி வழங்கினர். உச்ச நீதிமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை பலரும் வரவேற்றுப் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், 'ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் நமது திராவிட மாடல் பயணத்திற்கான மற்றுமோர் அங்கீகாரமாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளது' என்று தெரிவித்தார்.

மக்களைத் திசைதிருப்பும் நோக்கில் அவசர கோலத்தில் வார்த்தைகளை அள்ளித் தெளித்துச் சட்டத்தை நிறைவேற்றுவோரைப் போல் அல்லாமல், திமுக அரசு எந்த ஒரு சட்டத்தை நிறைவேற்றும் போதும், அதற்குரிய காரணங்களை முறையாக ஆராய்ந்து, தரவுகளைத் தொகுத்து, ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்டு குழு அமைத்து, பரிந்துரைகளைப் பெற்று அரசாணையாகவோ சட்டமாகவோ நிறைவேற்றி சாதாரண சாமானிய மக்களுக்கு உரிய பயன்களை உண்மையிலேயே அளித்து வருகிறது. இதனால், திமுக அரசின் சட்டம் எப்போதும் வெற்றியையே பெற்று வருவது வரலாறு ஆகியுள்ளது. அருந்ததியினர் இட ஒதுக்கீட்டு சட்டம் மீதான உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பு, நாட்டுக்கே வழிகாட்டும் திராவிட மாடல் அரசின் உன்னதமான திட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE