''மாநில வளர்ச்சியில் தொலைநோக்கு சிந்தனை இல்லாத புதுச்சேரி பட்ஜெட்'' - அதிமுக விமர்சனம்

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில வளர்ச்சியில் தொலைநோக்கு சிந்தனை இல்லாத பட்ஜெட்டை முதல்வர் தாக்கல் செய்துள்ளார் என்று புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று உப்பளம் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது: ''புதுச்சேரி மாநிலத்தில் நடப்பாண்டு போடப்பட்டுள்ள பட்ஜெட் என்பது தொலைநோக்கு சிந்தனை இல்லாத பட்ஜெட். ரூ.12,700 கோடியில் ஏறத்தாழ 92 சதவீதத்துக்கு மேல் வருவாய் செலவினங்களுக்காகவும், சுமார் 7 சதவீதம் மூலதன செலவினங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாம் பெற்ற கடன் வட்டிகளுக்கு இவ்வாண்டு சுமார் ரூ.1,800 கோடிக்கான கடன் மற்றும் வட்டியாக செலுத்துகிறோம்.

இந்நிலையில், இந்த பட்ஜெட்டின் பற்றாக்குறையை போக்க ரூ.2,066 கோடி கடன் மூலம் திறட்ட மத்திய அரசிடம் அனுமதி கேட்டு அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் பட்ஜெட் தொகையான ரூ.12,700 கோடியைக் கொண்டு நாம் வெளிக்கடன் பெறாமலேயே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து செலவினங்கள் மற்றும் திட்டங்களை செயல்படுத்த முடியும்.

நம் மாநிலத்தில் மக்களை பாதிக்காத பல்வேறு பொருட்களுக்கு உரிய வரி விதிப்பின் மூலம் ரூ.2,000 கோடிக்கு மேல் வருவாயை ஈட்ட முடியும். ஆனால் அரசு அதில் கவனம் செலுத்தியதாக இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை. மதுபான கொள்கையில் மாற்றம் என்பது அவசியமானது. இந்தியாவில் அனைத்த மாநிலங்களிலும் மதுபான் விற்பனையை ஒன்று அரசே நடத்தும் அல்லது மதுபான கொள்முதல் மற்றும் விநியோகம் என இவ்விரண்டையும் அரசே நடத்தும்.

ஆனால், புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் மதுபான விற்பனை, மதுபான கொள்முதல், மதுபான விநியோக விலை இவை அனைத்தையும் தனியார்களே நடத்துவதால் ஆண்டுக்கு சுமார் ரூ.1,500 கோடிக்கு மேல் அரசுக்கு வரவேண்டிய வருவாய் அரசியல் சார்புடைய பல்வேறு மதுபான தனியார் உரிமையாளர்களுக்கு சென்றுகொண்டிருக்கின்றது.

அதிமுகவின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்று இந்த பட்ஜெட்டில் சில நலத்திட்ட உதவிகளுக்கு நிதியுதவி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அதற்காக முதல்வர் ரங்கசாமிக்கு பாராட்டுகள். கடந்த திமுக - காங்கிரஸ் ஆட்சியில் மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறந்து அனைத்து குடும்பத்தினருக்கும் தரமான இலவச அரிசி வழங்குதல் மற்றும் பல ஆண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொது விநியோக திட்டத்தை மீண்டும் தொடங்கி கோதுமை, சர்க்கரை, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இது அதிமுகவின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.

ஆனாலும், இந்த திட்டத்தை செயல்படுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. ஏற்கெனவே உள்ள சில திட்டங்களுக்கு நிதியுதவி உயர்த்தி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் படித்த பட்டியலின இளைஞர்களுடைய எதிர்காலத்துக்கு எந்த ஆக்கபூர்வமான திட்டங்களும் இந்த படஜெட்டில் இல்லை. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுடைய வாழ்வாதாரங்கள் மற்றும் படித்த இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு எந்தத் திட்டமும் இந்த பட்ஜெட்டில் இல்லை. அவர்களுக்கான எந்த நிதி ஒதுக்கீடும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் அமைக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஓராண்டு காலமாகியும் இன்னமும் எம்ஆர்ஐ ஸ்கேன் அரசு பொது மருத்துவமனையில் இல்லை. ஒட்டுமொத்தத்தில் இந்த பட்ஜெட் என்பது ஒரு சில நலத்திட்டங்களுக்கான பட்ஜெட்டாக இருந்தாலும் மாநில வளர்ச்சியில் தொலைநோக்கு சிந்தனை இல்லாத பட்ஜெட்டாக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் திமுக உண்மையான எதிர்கட்சி அல்ல. என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியாகத்தான் திமுக உள்ளது'' என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE