“நம் முதல்வருக்கு கல்வியும் சுகாதாரமும் இரு கண்கள்” - பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ‘‘நம் முதல்வருக்கு கல்வியும் சுகாதாரமும் இரண்டு கண்கள்’’ என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி அருள்தாஸ்புரம் பகுதியில் உள்ள திருவிக மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சீருடைகள் வழங்கும் விழா நடந்தது. தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாணவ - மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சீருடைகள் வழங்கினார்.

அப்போது பேசிய பழனிவேல் தியாகராஜன், ‘‘நமது முதல்வர் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சொல்லக்கூடிய கருத்து கல்வியும் சுகாதாரமும் என்னுடைய இரண்டு கண்கள் என்பது தான். குழந்தைகள் கல்வி கற்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற நோக்கில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டம், விலையில்லா மிதிவண்டிகள் திட்டம், கல்வி கற்பதற்கு ஊக்கத்தொகை போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

நீதிக்கட்சி காலம் தொடங்கி கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக திராவிட இயக்கத்தின் கொள்கைகளால் தமிழகம் கல்வி வளர்ச்சியிலும், பொருளாதார வளர்ச்சியிலும், சமத்துவத்திலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. மதுரையில் திருப்பதி அப்பளம் நிறுவனத்தின உரிமையாளர் ராஜேந்திரன் அவர்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக தன்னார்வத்துடன் பெரும் நிதியை தானமாக வழங்கியுள்ளார்கள். அவரது இந்த செயலை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. இன்றைக்கு 193 மாணவ - மாணவியருக்கு மிதிவண்டிகளும், 495 மாணவர்களுக்கு சீருடைகளும் வழங்கப்படுகிறது’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார், துணை மேயர் நாகராஜன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா, மாநகராட்சி கல்வி அலுவலர் ரகுபதி, மாவட்ட சமூக நல அலுவலர் காந்திமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE