அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,000 கல்லூரி உதவித்தொகை: புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: அரசுப் பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவ - மாணவியருக்கு மூன்று ஆண்டுகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்லூரி உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

புதுவை சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி இன்று (வெள்ளிக்கிழமை) பட்ஜெட் தாக்கல் செய்தார். இலவச அரிசி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்: ஏழை மக்களின் மருத்துவ செலவு, புதுவை மருத்துவ நிவாரண சங்கத்தின் மூலம் திருப்பி அளிக்கப்படும். காமராஜர் நுாற்றாண்டு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஏழை மக்களின் குடிசை வீடுகளை கல்வீடுகளாக மாற்ற நிதியுதவி அளிக்கப்படும். ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோயில்களை புனரமைக்க ரூ.10 லட்சம் நிதி அளிக்கப்படும். அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, இளநிலை கல்லுாரிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

புதுவை, காரைக்கால் பிராந்தியத்தில் நலிவடைந்த கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்த ரூ.15 கோடி நடப்பு நிதியாண்டில் வழங்கப்படும். தடுப்பூசி அட்டவணைப்படி அனைத்து தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ளும் புதுவையை பூர்விகமாக கொண்ட பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும். கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வது தொடர்பாக நிர்வாக விதிமுறைகளில் ஒருமுறை தளர்வு அளித்து, விண்ணப்பங்களை பரிசீலிக்க ஒப்பீட்டு சேவை பயன் கொள்கையை உருவாக்க அரசு ஆராய்ந்து வருகிறது.

செயல்படாத நிறுவனங்களின் மனித வளம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உகந்த முயற்சி மேற்கொள்ளப்படும். தேசிய ஆயுஷ் திட்டத்தில் நிதி உதவியுடன் ராஜீவ் காந்தி ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பட்டமேற்படிப்பு படிப்புகள் தொடங்கப்பட்டு தரம் உயர்த்தப்படும். தேசிய ஆயுஷ் மிஷன் நிதி உதவியுடன் ஒருங்கிணைந்த ஆயுஷ் கல்வி நிறுவனம் புதுச்சேரியில் நிறுவப்படும்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஓமியோபதி மருத்துவப்பிரிவு, மருந்தகம் தொடங்கப்படும். புதுச்சேரி அரசு கோயில்களில் கடவுள் திருவுருவச்சிலைகள், தங்கம், வெள்ளி, ஆபரணங்கள், இதர அசையும் சொத்துகள் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் மின்னணு முறையில் ஆவணமாக்கப்பட்டு அவை மக்களின் பார்வைக்கு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

புதுச்சேரி ஆட்சி பரப்பில் ரூ. 105 கோடி மதிப்பீட்டில் பிரதம மந்திரி ஏக்தா மால் அமைக்க கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் பாரம்பரிய கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள் எளிதாக சந்தைப்படுத்தலாம். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உற்பத்தி தொடங்கி முதல் மூன்று ஆண்டுகளுக்கு உரிமங்கள் பெறுவது, ஆய்வுகளில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டம் 2024 இயற்றி விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.

தொழிலாளர்களுக்கான குறைந்தப்பட்ச ஊதியம் 2017-க்குப் பிறகு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குறைந்தப்பட்ச ஊதியம் ரூ. 5,220-ல் இருந்து ரூ. 13 ஆயிரம் ஆக பல்வேறு வேலைக்கு தகுந்தாற்போல் இருந்தது. அது ரூ. 5220-ல் இருந்து ரூ. 9,940 ஆகவும், அதேபோல் ரூ. 13 ஆயிரத்திலிருந்து ரூ. 23,790 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி நகரப்பகுதியில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்ய ரூ. 20.38 கோடியில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் நடக்கும்.

புதுச்சேரி - கடலூர் சாலையில் ஏஎஃப்டி அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்க ரயில்வே துறையுடன் இணைந்து ரூ. 71.4 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படும். இதில் அரசு பங்களிப்பான ரூ. 53.55 கோடி ரயில்வேயிடம் தரப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்கப்படும். பாதாளச்சாக்கடை புனரமைப்புப் பணிகள் ரூ.52.5 கோடியில் விரைவில் தொடங்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE