மகனை கொன்று புதைத்ததாக எழுத்தாளர் சௌபா உட்பட 3 பேர் கைது

By என்.சன்னாசி

மதுரையில் மகனை கொலை செய்த எழுத்தாளர் சௌபா உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை கோச்சடை அருகே உள்ள டோக் நகரைச் சேர்ந்தவர் சௌந்தரபாண்டியன் (எ) சௌபா (55). பிரபல எழுத்தாளர். வாரப் பத்திரிகை ஒன்றில் தென்மாவட்ட செய்தியாளராக இருந்தபோது, நெல்லை மாவட்டம், சீவலப்பேரி என்ற ஊரைப் பற்றிய ஒரு சம்பவத்தை தொடராக எழுதியவர்.

உசிலம்பட்டி சிசுக் கொலை, கொடைக்கானல் கொத்தடிமை தொழிலாளர்கள் பற்றிய சில பிரச்சினைகளை வெளிக் கொண்டு வந்தவர். தற்போது, தனியார் டிவி செய்தியின் 5 நிமிட சிறப்பு பகுதியை தயாரித்து கொடுத்து வந்தார். இதற்காக வீட்டிலேயே ஸ்டூடியோ அமைத்து பணிபுரிந்தார்.

இவரது மனைவி லதா பூரணம்(50). இவர் கோவில்பட்டி அரசு கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிகிறார். இவர்களது ஒரே மகன் விபின் (27). சென்னை லயோலா கல்லூரியில் படித்து முதுகலை பட்டம் பெற்றவர்.

குடும்பப் பிரச்சினை காரணமாக 18 ஆண்டுகளாக கணவன், மனைவி பிரிந்து வாழ்கின்றனர். விபின் படிப்பு முடிந்த பிறகு, தந்தை மற்றும் தாயாரிடம் மாறி, மாறி வசித்து வந்தார்.

மதுரையில் விபினுக்கு நண்பர்கள் அதிகம். அவர்களுடன் சேர்ந்து ஜாலியாக இருந்துள்ளார். கொடைக்கானல் உள்ளிட்ட சில இடங்களுக்கு காரில் நண்பர்களுடன் சுற்றி இருக்கிறார். இதை சௌபா கண்டித்துள்ளார்.

இந்நிலையில் சௌபா பயன்படுத்திய ரூ.15 லட்சம் மதிப்புள்ள காரை விபின் கடந்த மாதம் 20-ம் தேதிக்கு முன்பாக குறைந்த விலைக்கு விற்றுள்ளார். இதில் இருவருக்கும் இடையே பிரச்சினை அதிகரித்தது. இந்த சூழலில் ஏப்.30-க்குப் பிறகு விபின் திடீரென மாயமானார். அடிக்கடி போனில் பேசும் மகன், பேசாதது கண்டு லதா பூரணத்துக்கு சந்தேகம் எழுந்தது. மதுரை வந்த அவர் எஸ்.எஸ். காலனி போலீஸில் புகார் கொடுத்தார்.

சௌபாவிடம் ஆய்வாளர் சங்கர் கணேசன் விசாரித்தார். இதற்கிடையில் விபின் வீட்டில் கொலை செய்யப்பட்டு, உடலை காரில் ஏற்றிச் சென்று கொடைரோடு அருகே சிறுமலை அடிவாரத்தில் உள்ள சௌபாவின் தோட்டத்தில் புதைத்தது தெரியவந்தது.

போலீஸார் அங்கு சென்று தோட்டத்து தொழிலாளர் இருவரிடம் விசாரித்து, கொலையை உறுதி செய்தனர். இது தொடர்பாக சௌபா, பண்ணைத் தோட்ட ஊழியர்கள் பூமி(40), கனிக்குமார்(42) ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர். இவர்கள் மதுரை 5-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட் ஆர்.உமா மூவரையும் மே 24-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அப்போது சௌபாவுக்கு 3 நாள் போலீஸ் காவல் கேட்டு, எஸ்.எஸ். காலனி போலீஸார் மனு தாக்கல் செய்தனர். இதையேற்று நேற்று மாலை 4 மணி முதல் இன்று மாலை 5 மணி வரை போலீஸ் காவலில் விசாரிக்க மாஜிஸ்திரேட் உமா அனுமதி அளித்தார்.

சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள்

இதற்கிடையே நீதிமன்ற வளாகத்தில் சௌபாவைப் பார்க்க, அவரது நண்பர்கள், வழக்கறிஞர்கள் வந்தனர். வழக்கறிஞர்களிடம் அவரைப் பேச விடாமல் போலீஸார் தடுத்தனர். கோபமடைந்த வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் நாங்கள் பேசாமல் யார் பேசமுடியும் என போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர். தனது வழக்கறிஞர்களுடன் சௌபா பேசும்போது, நெஞ்சு வலி உள்ளது. சிறைக்குள் சிகிச்சை பெற ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

கொலைக்கு உதவியோருக்கு தலா 2 ஏக்கர்?

சொத்துகளை கேட்டு தினமும் போதையில் வந்து சௌபாவிடம் மகன் விபின் தொந்தரவு செய்து வந்தாராம். ஒரு கட்டத்தில் மகனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது. ஏப். 30-ம் தேதி கோபத்தின் உச்சத்துக்குச் சென்றநிலையில், தோட்டத்து ஊழியர்களை அழைத்து அவர்களிடம் மகனின் தொந்தரவுகளை சொல்லி அழுது புலம்பி இருக்கிறார்.

‘‘ நீங்களும் அடிக்கடி தோட்டத்தில் விபின் செய்யும் காரியங்களை நேரில் பார்த்தவர்கள் என்ற முறையில் சொல்கிறேன். அவனுக்கு முடிவு கட்டவில்லையெனில் சொத்துக்காக என்னை கொலை செய்யவும் துணிந்துவிட்டான். எனக்கு உதவுங்கள்’’ எனக் கெஞ்சியதாகவும், இச்சம்பவத்தை முடித்துக் கொடுத்தால் தலா 2 ஏக்கர் எழுதிக் கொடுக்கிறேன் என்ற உத்தரவாதமும் கொடுத்ததாகப் போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்