புதுச்சேரி ஆளுநர் மாளிகை இடம் மாறுகிறது; ராஜ்நிவாஸை புதுப்பிக்க ரூ.14 கோடி: முதல்வர் ரங்கசாமி

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை இடம் மாறவுள்ளது. பழுதடைந்த ராஜ்நிவாஸை மறுசீரமைக்க ரூ. 14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். ஆளுநர் அலுவலகம், குடியிருப்பு வசதிக்காக பழைய சாராய ஆலை வளாகம் ரூ.13.4 கோடியில் மேம்படுத்தப்படவுள்ளது.

புதுச்சேரியில் இன்று முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்: "போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ரூ.5.91 கோடியில் வலுப்படுத்தவுள்ளது. காவல், சிறைச்சாலை, நீதிமன்றம், தடயவியல் துறைகளிடம் தகவல் பரிமாற்றம் எளிதாக விரைவாக மேற்கொள்ள ஐசிஜெஎஸ் 2.0 ஆக ரூ.6.29 கோடியில் தரம் உயர்த்தப்படும். காவல்துறை காலிபணியிடங்கள் நடப்பாண்டில் மீதமுள்ளவை நிரப்பப்படும். காவல் துறைக்கான ஆயுதம், வெடிப் பொருட்கள் ரூ.3 கோடியில் வாங்கப்படும்.

காவல் தலைமை அலுவலகம் புனரமைத்தல், காவலர் பயிற்சி பள்ளியில் நீச்சல் குளம் கட்டுதல், ஆயுதப் பிரிவுக்கு புதிய கட்டிடம், மாஹேயில் கடலோரக் காவல் நிலையம் ஆகியவற்றுக்கு ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் சரக்கு, மீன்பிடி படகுகள் வந்து செல்ல துறைமுக முகத்துவாரத்தில் மணலை குறைப்பதை புனே மத்திய நீர் ஆற்றல் ஆராய்ச்சி நிறுவனம் ஆராய்கிறது.

இது முகத்துவார படிமானங்களை குறைக்கவும், தற்போதுள்ள 3.5 மீட்டர் உயரமுள்ள சரக்கு கப்பல் செல்லும் பாதையை அகற்றி 5.5 மீட்டர் உயரமுள்ள சரக்கு கப்பல் வந்து செல்லும் அளவில் பாதை அமைக்க சாத்தியக்கூறுகளை ஆராயும். புதுச்சேரி துறைமுகத்தில் பயணியர் கப்பல் வந்து செல்ல முனையம் அமைக்க திட்ட அறிக்கை தர ஆய்வு நடக்கிறது. துறைமுகத்துக்கு கப்பல்கள் வந்து செல்ல மணல் தூர்வாரும் பணி நடக்கும். தூர்வாரப்பட்ட மணல் மூலம் புதுச்சேரி கடற்கரை புணரமைக்கப்படும்.

நகரப் பகுதி குடிநீர் தர பிரச்சினையை தீர்க்க வானூர் மணற்கல்லில் இருந்து தரமான நீரை எடுக்க 300 மீட்டருக்கும் அதிகமான ஆழத்துக்கு ரூ.12 கோடியில் 40 ஆழ்துளை கிணறு அமைக்கப்படும். புதுச்சேரி பிராந்தியத்தில் ரூ. 30.5 கோடியில் 1 எம்எல்டி கொள்ளளவு கொண்ட 7 உவர் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். ஊசுடு ஏரி நீரை சுத்திகரிப்பு செய்யும் ஆலை அமைக்கப்படும்.

கனகனேரி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் இயந்திரங்கள் நிறுவப்படும். துப்புராயன்பேட்டையில் ரூ.39.5 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படுகிறது. சங்கராபரணி ஆற்றில் 3 எம்எல்டி கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.36.7 கோடியில் அமைக்கப்படுகிறது.

புதுச்சேரியின் 4 பிராந்தியங்களிலும் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கான ரூ.4,125 கோடி மதிப்பீட்டில் உள் கட்டமைப்பு வசதி நடப்பு நிதியாண்டில் பணிகள் தொடங்கும். பிள்ளைச்சாவடி முதல் கணபதி செட்டிக்குளம் வரை கடலோர பகுதிகளில் புயலால் ஏற்படும் கடல் அரிப்பைத் தடுக்க குறுகிய இடைக்கால அவசர தடுப்புகள் ரூ.22 கோடியில் அமைக்கப்படும்.

செல்லிப்பட்டு - பிள்ளையார்குப்பம் கிராமத்தை இணைக்க சங்கராபரணியில் ரூ.20.4 கோடியில் புதிய தடுப்பணை கட்டப்படும். நகரப் பகுதியில் உப்பார் கால்வாய் மேம்பால கட்டுமான மீதமுள்ள பணிகள் ரூ.29 கோடியில் நடப்பாண்டில் மாநில நிதியில் கட்டி முடிக்கப்படும். இந்திரா காந்தி - ராஜீவ் காந்தி சதுக்கங்களை இணைக்க ரூ.500 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை நெடுஞ்சாலை அமைச்சக ஒப்புதலுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி கிராமப்புற வேலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ. 60 கோடியில் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள கிராமங்களில் 92 கிமீ தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்படும். நகர்பகுதிகளில் சேதமடைந்த சாலைகள், பக்கவாட்டு வடிகால்கள் ரூ. 120 கோடியில் சீரமைக்கப்படும். புதுச்சேரி ராஜ்நிவாஸ் ரூ. 14 கோடியில் மறுசீரமைக்கப்படும். ஆளுநரின் குடியிருப்பு வசதி மற்றும் அலுவலகத்துக்காக பழைய சாராய ஆலை வளாகம் ரூ.13.4 கோடியில் மேம்படுத்தப்படும்.

லாஸ்பேட்டையில் பழுதடைந்த அரசு ஊழியர் குடியிருப்புகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புகள் ரூ.100 கோடியில் கட்டப்படும். விழுப்புரம்- புதுச்சேரி- கடலூர்- நாகை நான்கு வழி சாலை திட்டத்தில் நில உரிமையாளர்களுக்கான மீதமுள்ள இழப்பீட்டு தொகை ரூ.10.59 கோடி நடப்பாண்டில் தரப்படும். மாமல்லபுரம் - புதுச்சேரி நான்கு வழிசாலை திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீடு தொகை நடப்பாண்டில் தரப்படும்.

கிராமங்களில் காற்றின் தரத்தை மதிப்பிட புதுச்சேரியில் 3 காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் நிறுவப்படும். காரைக்கால் திருநள்ளாறு கோயில் நகரத்தில் ரூ.17.26 கோடியில் தேசிய அறிவியல் அருங்காட்சியகம், மின்னணு கோளரங்கம் அமைக்கப்படும். நரம்பையில் நவீன கலை, கடல்சார் கடல் உயிரியல் நிலையம் நிறுவப்படும். கடல் அரிப்பைத் தடுக்க கடற்கரை மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு கால நிலை மேம்பாட்டுக்கு ரூ.130 கோடியில் நடவடிக்கை.

புதுச்சேரி கடற்கரையின் தெற்கு பகுதியில் ரூ.60 கோடியில் கடல் அறிப்பு தடுப்பு அறன் அமைக்கப்படும். தேங்காய்திட்டில் சூழலியலுக்கு உகந்த சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ.50 கோடியிலும், கப்பல் பயணம் முனையகம் அமைக்க ரூ.175 கோடியிலும் பணிகள் நடக்கும்" என்று முதல்வர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE