கத்திவாக்கம் தாமரைக்குள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்: சென்னை மாநகராட்சி உறுதி @ பசுமை தீர்ப்பாயம்

By ச.கார்த்திகேயன்

சென்னை: சென்னை கத்திவாக்கம் தாமரைக் குளத்தில் உள்ள 37 ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையை சேர்ந்த மீனவ தந்தை கே.ஆர்.சிவராஜ்குமார் மீனவர் நல சங்க தலைவர் எம்.ஆர்.தியாகராஜன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த 2022-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: சென்னை மாவட்டம், கத்திவாக்கம் கிராமத்தில் தாமரைக்குளம் உள்ளது. வருவாய்த்துறை ஆவணங்களின்படி இதன் உண்மையான பரப்பு 5.32 ஏக்கர். ஆக்கிரமிப்புகள் காரணமாக, தற்போது இது 2 ஏக்கராக சுருங்கியுள்ளது. அங்கு விதிகளை மீறி ஏராளமான பன்னடுக்கு மாடிகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன.

இந்த விதிமீறல்களை தொடர்புடைய அரசுத்துறைகள் தடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றன. அந்த குளத்தில் குப்பைகளும் கொட்டப்பட்டு வருகிறது. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீரும் விடப்பட்டு மாசுபடுத்தப்பட்டு வருகிறது. அதனால் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அங்கு முறையாக அளவீடு செய்து குளத்தை மீட்டு, குளத்தில் தூர் வாரி சீரமைக்கவும் தொடர்புடைய அரசு துறைகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுதாரர் கோரியிருந்தார்.

இந்த மனு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் ‘தாமரைக்குளத்தை சுற்றி 52 ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் காவல்துறை உதவியுடன் 15 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மீதம் உள்ள 37 ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, “மீதம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும் என நம்புகிறோம்” என்று தெரிவித்த அமர்வின் உறுப்பினர்கள், வழக்கின் மீதான அடுத்த விசாரணையை செப்.17-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE