‘வேர்களைத் தேடி’ திட்டத்தின்கீழ் 100 அயலக தமிழர்கள் ‘தமிழக சுற்றுப்பயணம்’ - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘வேர்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் 15 நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞர்கள் தமிழகத்தில் 15 நாட்கள் மேற்கொள்ளவுள்ள சுற்றுப்பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: பண்டைய தமிழர்களின் கட்டிடம், சிற்பக்கலை, நீர்மேலாண்மை, ஆடைகள் மற்றும் ஆபரணங்கள், கலை இலக்கிய பண்பாடு,தொல்லியல் ஆய்வுகள், அறிஞர்கள் மற்றும் சான்றோர்களுடன் கலந்துரையாடல் என்றகலாச்சார பரிமாற்றம் மேற்கொள்ளும் சுற்றுலாத் திட்டமான ‘வேர்களைத் தேடி’ என்ற அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான திட்டத்தை கடந்தாண்டு மே 24-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இத்திட்டப்படி, அயல்நாடுகளில் வாழும் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட தமிழ் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழகம் வரவழைத்து தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு, தமிழகஅரசு சார்பில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

அதன் அடிப்படையில், சென்ற ஆண்டு இந்த பண்பாட்டுப் பயணத் திட்டத்தில், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் மூலம் 4 நாடுகளைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களைக் கொண்டமுதற்கட்ட பயணம் மேற்கொள்ளப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில் 2-ம் கட்ட பயணமாக, தென்ஆப்ரிக்கா, உகாண்டா, குவாடலூப், மார்டினிக், பிஜி, இந்தோனேஷியா, மொரிஷியஸ், ஆஸ்திரேலியா, மாலத்தீவு, கனடா, மியான்மர், மலேசியா, இலங்கை. பிரான்சு மற்றும் ஜெர்மனி ஆகிய 15 நாடுகளைச் சேர்ந்த100 அயலகத் தமிழ் இளைஞர்கள் வரவழைக்கப்பட்டு, ஆக.1 முதல் 15-ம் தேதி வரை 15 நாட்களுக்கு தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இப்பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இப்பயணத்தில் பங்குபெறும் அயலகத் தமிழ் இளைஞர்கள், தமிழகத்தின் கலாச்சார தூதுவர்களாகச் செயல்பட்டு தமிழர்களின் கலாச்சார பெருமைகளை அவர்களது நாடுகளில் பரப்புவர்.

இந்நிகழ்ச்சியில், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, பொதுத்துறை செயலர் ரீட்டா ஹரிஷ் தக்கர், இணைச் செயலர் பா. விஷ்ணு சந்திரன், மறுவாழ்வுத்துறை ஆணையர் பா. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE