காவல்துறை சார்பில் ரூ.48 கோடியில் குடியிருப்புகள், காவல் நிலையங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

By செய்திப்பிரிவு

சென்னை: காவல்துறை சார்பில் ரூ.47.51 கோடியில் கட்டப்பட்டுள்ள 53காவலர் குடியிருப்புகள், 6 காவல்நிலையங்கள், 2 துறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் தற்போது வரை ரூ.454.63 கோடியில் 2,733 காவலர் குடியிருப்புகள், ரூ.43.60 கோடியில் 41 காவல் நிலைய கட்டிடங்கள், ரூ.69.83 கோடி செலவில் 14 காவல்துறை இதர கட்டிடங்கள் மற்றும்“உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் ரூ.55.19 கோடி மதிப்பிலான 253 குடியிருப்புகள் ஆகியவை காவல்துறையினரின் மேம்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, திருச்சி -ஜெம்புநாதபுரம், உறையூரில் ரூ.6.99 கோடியில் 53 காவலர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் சென்னை - டி.பி.சத்திரம், ஜெ.ஜெ.நகர், புதுக்கோட்டை - ரெகுநாதபுரம், திருவாரூர் - மன்னார்குடியில் காவல் நிலையங்கள், திருச்சிராப்பள்ளி - பீமா நகரில் ஒருங்கிணைந்த அமர்வு நீதிமன்ற காவல் நிலையம், சிந்தாமணியில் ஒருங்கிணைந்த கோட்டை காவல் நிலையம் என ரூ.11.44 கோடியில் 6 காவல் நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.

இவைதவிர, செங்கல்பட்டு மாவட்டம் – மேலக்கோட்டையூரில் 2-ம் கட்டமாக காவலர் பொதுப்பள்ளி மற்றும் தென்காசியில் மாவட்ட காவல் அலுவலகம் எனரூ.29.08 கோடியில் 2 காவல் துறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

மொத்தம் ரூ.47.51 கோடியில்கட்டப்பட்ட காவலர் குடியிருப்புகள், காவல் நிலையங்கள் மற்றும் காவல் துறை கட்டிடங்களை நேற்றுகாணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலர் தீரஜ்குமார், டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் ஆ.அருண், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (பொறுப்பு) வினித் தேவ் வான்கேடே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE