இலங்கை கடற்படை தாக்குதலில் தமிழக மீனவர் உயிரிழப்பு: அரசு கண்டனம் முதல் மீனவர்கள் போராட்டம் வரை

By எஸ். முஹம்மது ராஃபி


ராமேசுவரம்: இலங்கை கடற்படை தாக்குதலில் தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துக்கு டெல்லியில் உள்ள இலங்கை தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நடுக்கடலில் மாயமான ஒரு மீனவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 400 விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் புதன்கிழமை கடலுக்குச் சென்றனர். புதன்கிழமை இரவு நெடுந்தீவு கடற்பகுதியில் கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் இருந்த மலைச்சாமி (59), ராமச்சந்திரன் (64), முத்து முனியாண்டி (57) , மூக்கையா (54), ஆகியோர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதால் மீனவர்களை கைது செய்வதற்காக தங்களது கடற்படை ரோந்து படகு கப்பல் மூலம் துரத்தியதோடு, கார்த்திகேயன் என்பவரின் விசைப்படகில் கடுமையாக மோதியதில், அந்த படகு நடுக்கடலில் மூழ்கியது.

இலங்கை கடற்படையின் இந்த தாக்குதல் சம்பவத்தால் மலைச்சாமி என்ற மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். மேலும் ராமச்சந்திரன் என்ற மீனவர் மாயமாகி உள்ளார். மேலும் முத்து முனியாண்டி, மூக்கையாக ஆகிய இரண்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் அருகே காங்கேசன்துறையில் உள்ள கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மாயமான மீனவரான ராமச்சந்திரனை சர்வதேச கடல் எல்லை பகுதியில் தேடும் பணியில், ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளத்தில் இருந்து ஒரு ஹெலிகாப்டரும், மண்டபம் இந்திய கடலோர காவல் முகாமிற்குச் சொந்தமான ரோந்து கப்பலும் ஈடுபட்டுள்ளன.இலங்கை கடற்படையினர் தாக்குதலில் மீனவர் உயிரிழந்ததை தொடர்ந்து, ராமேசுவரம் தாலுகா அலுவலம் எதிரே மதுரை தேசிய நெடுங்சாலையில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர் மலைச்சாமியின் குடும்பத்தாருக்கு காசோலை வழங்கும் மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ

மறியலில் ஈடுபட்டு மீனவர்களிடம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, மாயமான மீனவர் ராமச்சந்திரனை தேடும் பணிகள் நடைபெற்றுவருவதாகவும், மீட்கப்பட்ட முத்து முனியாண்டி, மூக்கையா ஆகிய இரண்டு மீனவர்களை தாயகத்திற்கு அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.மேலும், உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோர் வழங்கினர்.

எச்சரித்த ராமேசுவரம் மீன்வளத்துறை: முன்னதாக, கடந்த ஜூன் 25 அன்று இலங்கை கடற்படையினர் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகை கைப்பற்றி, படகிலிருந்த 10 பேரை கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையின் போது, இலங்கை ரோந்துப் படகிருந்த இலங்கை கடற்படை வீரர் ரத்நாயக்க, கைப்பற்றப்பட்ட மீனவர்களின் படகிலிருந்து தவறி விழுந்தது, மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். இதனால் சர்வதேக கடல் எல்லையில் எதுவும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்காக இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என ராமேசுவரம் மீன்வளத்துறையினர் வலியுறுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு கண்டனம்: இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு: “கச்சத்தீவுக்கு வடக்கே 5 கடல் மைல் தொலைவில் இலங்கை கடற்படை கப்பல் ஒன்றும் இந்திய மீன்பிடி படகு ஒன்றும் இன்று அதிகாலை மோதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி படகிலிருந்த நான்கு இந்திய மீனவர்களில் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காணாமல் போயுள்ளார். மீனவர்களில் இருவர் மீட்கப்பட்டு இலங்கையிலுள்ள காங்கேசன்துறை கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். காணாமல் போன இந்திய மீனவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் உடனடியாக காங்கேசன்துறைக்கு விரைந்து சென்று மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புதுடெல்லியில் உள்ள இலங்கை தூதுரக அதிகாரி இன்று வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டு மீனவர் உயிரிழப்பு குறித்து மத்திய அரசின் அதிர்ச்சியையும், வேதனையையும் வெளிப்படுத்தியதோடு, கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பில் உள்ள இந்திய தூதர் இந்த சம்பவம் குறித்து இலங்கை அரசிடம், ''மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளை மனிதாபிமானமான முறையில் கையாள வேண்டும் என்று இந்திய அரசு எப்போதும் வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் இந்திய-இலங்கை அரசுகளுக்கு இடையே நிலவும் புரிந்துணர்வுகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும். மீண்டும் இத்தகைய சம்பவம் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியதாக அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினரின் ரோந்து படகு மோதியதில், மீன்பிடி விசைப்படகு சேதமடைந்து நீரில் மூழ்கியதில் மலைச்சாமி (வயது 59) என்பவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், அந்த விசைப்படகில் சென்ற இரண்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அழைத்துச் சென்றதாகத் தெரியவருகிறது. மேலும், மற்றொரு மீனவர் தேடப்பட்டு வருகிறார். தமிழ்நாடு அரசு தொடர்ந்து பலமுறை கடிதம் மூலமாகவும், நேரிலும் ஒன்றிய அரசை வலியுறுத்தியும் உரிய தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும் இதுபோன்ற விலைமதிப்பில்லா உயிரிழப்புகளும் நேர்கின்றது.

இச்சம்பவத்தை ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு தக்க முறையில் எடுத்துச் செல்லும். இச்சம்பவத்தில் உயிரிழந்த மலைச்சாமி அவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவருடைய குடும்பத்தினருக்கு பத்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்