வயநாடு நிலச்சரிவில் தாளவாடியை சேர்ந்த தம்பதி உயிரிழப்பு

By எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு: வயநாட்டில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களாகப் பணிபுரிந்த ஈரோடு மாவட்டம் தாளவாடியைச் சேர்ந்த தம்பதியினர், வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். மாயமான மகேஷ் என்பவரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 290-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மாயமான பலரை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள காமயன்புரம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கசாமி என்பவர், வயநாட்டில் உள்ள முண்டக்கை என்கிற ஊரில் தனது குடும்பத்துடன் தங்கி தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்து வந்தார்.

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ரங்கசாமி மற்றும் அவரது மனைவி புட்டு சித்தம்மா ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களின் வளர்ப்பு மகன் மகேஷும் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

இதனிடையே, நிலச்சரிவில் உயிரிழந்த புட்டு சித்தம்மாவின் உடல், தாளவாடியை அடுத்த காமயன்புரம் கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டு, இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. ரங்கசாமியின் உடல், பிரேத பரிசோதனைக்காக வயநாடு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்திருப்பது தாளவாடி பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE