இலங்கை கடற்படை ரோந்துப் படகு மோதியதில் 4 மீனவர்கள் மாயம்: ராமேசுவரத்தில் சோகம்

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் விசைப்படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு மோதியதில் தமிழக மீனவர்கள் 4 பேர் மாயமாகினர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 400 விசைப்படகுகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் புதன்கிழமை கடலுக்குச் சென்றனர். புதன்கிழமை இரவு மீனவர்கள் கச்சத்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் ரோந்து வந்துள்ளனர். இலங்கை கடற்படையினரை கண்டதும் கைது நடவடிக்கைக்கு அஞ்சி மீனவர்கள் விசைப்படகுகளை கரைகளை நோக்கி திருப்பி உள்ளனர்.

அப்போதும் விடாமல் இலங்கை கடற்படையினர் ரோந்துப் படகில் அவர்களை துரத்திச் சென்றுள்ளனர். இதில், கார்த்திகேயன் என்பவரின் விசைப்படகு மீது இலங்கை ரோந்துப் படகு மோதியுள்ளது. இதனால் கார்த்திகேயனின் படகு நடுக்கடலில் மூழ்கியுள்ளது. மேலும் அந்த விசைப்படகில் இருந்த மலைச்சாமி, முத்து முனியாண்டி, மூக்கையா, ராமச்சந்திரன் ஆகிய நான்கு மீனவர்கள் மாயமாகி உள்ளனர். மீனவர்கள் குறித்த தகவல் எதுவும் கிடைக்காததால் மாயமான மீனவர்களை மீட்டுத் தருமாறு படகின் உரிமையாளர் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

இலங்கை கடற்படை ரோந்துப் படகு மோதியதில் நான்கு மீனவர்கள் மாயமான சம்பவம் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE