பாமக பிரமுகர் கொலை வழக்கு: தமிழகம் முழுவதும் பல இடங்களில் என்ஐஏ சோதனை

By செய்திப்பிரிவு

திருவாரூர்/மயிலாடுதுறை/ காரைக்கால்/ திருச்சி: திருவிடைமருதூரைச் சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில் என்ஐஏ அதிகாரிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருச்சி, கும்பகோணம் உள்பட பல இடங்களில் இன்று (ஆகஸ்ட் 1) சோதனை நடந்து வருகிறது.

திருவாரூரில் சோதனை: திருவிடைமருதூரைச் சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (NIA) தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வரும் நிலையில், இன்று அதிகாலை முதல் திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள கம்பூர் பகுதியைச் சேர்ந்த நவாசுதீன் (34) என்பவர் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். நவாசுதீன் ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார். ஏற்கெனவே பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா என்கிற தடை செய்யப்பட்ட அமைப்பில் உறுப்பினராக இருந்துள்ளார். தற்போது எஸ்டிபி ஐ கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்போன், லேப்டாப்களை கைப்பற்றி ஆய்வு: இவரது வீட்டில் அதிகாலை 6 மணி முதல் மூன்று பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த சோதனை, நீதிமன்ற ஆணை பெறப்பட்டு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதில் கொலை வழக்கு தொடர்பாக ஏதேனும் செல்போன் உரையாடல் இருக்கிறதா என சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர் . இதற்காக செல்போன்கள் மற்றும் லேப்டாப் போன்றவற்றை கைப்பற்றி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதேபோன்று திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் ராஜ் முகம்மது (40) என்பவர் வீட்டிலும் ஐந்து பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா என்கிற அமைப்பில் உறுப்பினராக இருந்து வருகிறார். இவரது வீட்டில் உள்ள லேப்டாப் மற்றும் செல்போன்கள் ஆகியவற்றை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றி சோதனை நடத்தி வருகின்றனர். அதில் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா என்பது குறித்தும் என்ஐஏ அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மயிலாடுதுறை, காரைக்காலில் சோதனை: இதேபோல், மயிலாடுதுறை மாவட்டத்தில் இரு இடங்களிலும், காரைக்கால் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் திருச்சி மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு இரு பிரிவுகளாக வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வடகரையைச் சேர்ந்த பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா முன்னாள் மாவட்டச் செயலாளர் நவாஸ் கான் மற்றும் தேரழந்தூர் கிராமத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா முன்னாள் மாவட்டத் தலைவர் முகமது பைசல் ஆகியோர் வீடுகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அதிகாலை முதல் தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு இரு இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காரைக்கால் சுண்ணாம்புகார வீதியில் அஸ்ரப் அலி என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

திருச்சி: ஏர்போர்ட் காமராஜர் நகர் சத்தியமூர்த்தி தெருவைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தில் முன்னாள் தலைவர் அமீர் பாஷா வீடு மற்றும் திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டையில் எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் முகமது சித்திக் என்பவரது வீடு ஆகியவற்றில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

கும்பகோணத்தில் 6 பேரின் வீட்டில் சோதனை: கும்பகோணம் வட்டம், மேலக்காவேரி, கே.எம்.எஸ். நகரைச் சேர்ந்த முன்னாள் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா கிளை தலைவர் முகமது யூசுப், கொரநாட்டு கருப்பூரைச் சேர்ந்த சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா முன்னாள் மாவட்டத் தலைவர் முகமது பைசல், திருவிடைமருதூர் வட்டம் , திருபுவனத்தை சேர்ந்த சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா உறுப்பினருமான சகாபுதீன், திருமங்கலக்குடி, ஹாஜியார் தெருவைச் சேர்ந்த சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா உறுப்பினர் இம்தியாஸ், திருமங்கலக்குடி சின்ன தலக் கால் தெருவைச் சேர்ந்த பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா முன்னாள் மாவட்ட செயலாளர் முகமது ஹாலித், அதேப் பகுதியைச் சேர்ந்த சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கிளைத்தலைவர் முகமது ஹாலித் ஆகிய ஆறு பேரது வீடுகளில் இன்று அதிகாலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

- எஸ்.கோபாலகிருஷ்ணன் / வீ . தமிழன்பன் / சி.எஸ்.ஆறுமுகம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE