தமிழகம் முழுவதும் ஆட்சியரின் கீழ் கல்விச் செயல்பாடுகளுக்கான பி.சி.க்கள் உடனே பணியில் சேர உத்தரவு

By ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் ஆட்சியரின் கீழ் கல்விச் செயல்பாடுகளுக்கான பி.சி.க்கள் இன்று (ஆக. 1) பணியில் சேர பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கல்வி முறைகள் மற்றும் தர நிலைகளை மேம்படுத்த ஆட்சியர் தலைமையில் மாதந்தோறும் மாவட்டக் கல்வி ஆய்வு நடத்தப்படவேண்டும். மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவின் தலைவர் என்ற முறையில் ஆட்சியர் தற்போதுள்ள கல்வி முறைகளை முழுமையாக அறிந்திருப்பதையும், எதிர்காலத்தின் கல்வித் தேவைகளை மாற்றியமைக்கும் வகையில் மேம்படுத்துவதையும் உறுதி செய்யவேண்டும்.

குழந்தைகளின் கல்வி சார்ந்த தேவைகள், பிரச்சினைகள் குறித்து பெற்றோர்கள் கலந்துரையாடுவதற்கு ஏதுவாக ஆட்சியர் தலைமையில் கல்வி வளர்ச்சி குறை நாள் மாதம் ஒரு முறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டக் கல்வி ஆய்வு, கல்வி வளர்ச்சி குறைதீர் நாள், மாவட்ட கண்காணிப்பு குழு, பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகள் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை மாவட்ட அளவில் கண்காணிக்கவும், ஒருங்கிணைக்கவும் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியரின் கீழ் கல்விச் செயல்பாடுகளுக்கான தனி எழுத்தர்கள் (கலெக்டர் பி.சி) நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் கல்விச் செயல்பாடுகளுக்கான தனி எழுத்தர்கள் இன்று (ஆக. 1ம் தேதி) முதன்மைக் கல்வி அலுவலர் உடன் சென்று பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக 38 மாவட்டங்களில் கல்வித்துறையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கல்விச் செயல்பாடுகளுக்கான தனி எழுத்தர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னையில் ஜூலை 18, 19ம் தேதிகளில் கடமைகள் மற்றும் பொறுப்புச் சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டது.

தனி எழுத்தர்களுக்கான பணிகளாக வரையறுக்கப்பட்டுள்ளவை. தலைமை ஆசிரியர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், குடிமை சமூக அமைப்பினர், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் போன்றோரை மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டங்களை ஒருங்கிணைக்கவேண்டும். கல்வி வளர்ச்சி குறைதீர் நாளுக்கான தரவுகள் போன்ற முன்னேற்பாடுகள், கூட்டம் முடிந்த பின் தீர்வு காணப்பட வேண்டியவைகளை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டியவை, கூட்டங்களை ஏற்பாடு செய்யும் முன்னர் அதற்கான கால அட்டவணை, தேவையான தரவுகள் முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும்.

பள்ளிகளின் செயல்பாடு, வருகைப் பதிவு, உட்கட்டமைப்பு, பள்ளி சார்ந்த பிரச்சினைகள். மற்றும் ஆட்சியரின் எமிஸ் உள்ளீட்டில் உள்ள தரவுகளை தொடர்ச்சியாக சேமிக்கவேண்டும். சேமித்து வைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் பள்ளியின் தேவைகளை வகைப்படுத்தி ஆட்சியரின் பார்வைக்கு உடனுக்குடன் எடுத்துச் செல்லவேண்டும். ஆட்சியருக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும் இணைப்புப் பாலமாக இருந்து பள்ளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும்.

மாவட்ட அளவில் பள்ளி, கல்வி சார்ந்த தேவைகள் பிரச்சினைகள் அதை சரி செய்வதற்கான துல்லியமான விளக்கங்களுடன் அறிக்கை தயாரித்து சமர்பிக்கவேண்டும். மாவட்ட அளவில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள், செயல்பாடுகள் சரியான முறையில் பள்ளிகளுக்கு செல்வதை உறுதி செய்தல். பள்ளிக் கல்வித்துறையில் கல்வி சார்ந்து நடக்கும் மாற்றங்கள் குறித்து ஆட்சியருக்கு உடனுக்குடன் தெரிவிக்கவேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE