தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட திருச்சி கொள்ளிடம் ஆற்றுப் பால தடுப்புச் சுவர்

By தீ.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் ஆர்ப்பரித்துச் செல்லும் தண்ணீரின் வேகத்தில் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் பாலத்தின்கீழே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர் இடிந்து அடித்துச் செல்லப்பட்டது.

ஸ்ரீரங்கம் - நம்பர்.1 டோல்கேட் இடையே கொள்ளிடம் ஆற்றில் உள்ள நேப்பியர் புதிய பாலத்தின் அருகே, பழைய பாலம் இருந்த இடத்தில் மண் அரிப்பை தடுக்க ரூ.7.50 கோடி செலவில் கடந்த ஆண்டு தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் ஒரு லட்சம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேல் அணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது.

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் ஆர்ப்பரித்துச் செல்லும் தண்ணீரின் வேகத்தில் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் பாலத்தில் கீழே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர் இடிந்து தண்ணீர் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. தண்ணீர் அதிக அளவில் செல்வதாலும் இரவு நேரம் என்பதாலும் இந்த தடுப்புச் சுவர் எவ்வளவு நீளத்துக்கு உடைந்துள்ளது என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. இந்நிலையில், பாலக்கட்டையில் படுத்து உறங்கிய நபர் தீயணைப்புத் துறையினரால் இன்று காலை மீட்கப்பட்டார்.

திருச்சி, ஸ்ரீரங்கம் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் தூண் பகுதியின் கீழ் உள்ள சிமெண்ட் கட்டையில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது முக்கொம்பு அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் இரண்டு கரைகளையும் தொட்டுக் கொண்டு ஓடியது. தண்ணீர் அதிகரித்தால் அவர் கூச்சலிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பாலத்தின் மேற்பகுதியில் இருந்து கயிறு கட்டி தீயணைப்பு வீரர் ஒருவர் கீழே இறங்கி சிக்கிக் கொண்டிருந்த நபரை கயிறு மூலம் கட்டி மேலே தூக்கி மீட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE