வயநாடு மக்களுக்கு நிவராணமாக ஒரு மாத அமர்வுக் கட்டணம் அளிக்க குன்னூர் கவுன்சிலர்கள் தீர்மானம்

By ஆர்.டி.சிவசங்கர்


குன்னூர்: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு குன்னூரில் நடந்த நகராட்சி கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் கவுன்சிலர்கள் அனைவரும் ஒரு மாதத்திற்கான தங்களின் அமர்வுக் கட்டணத்தை நிவாரண நிதிக்கு வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றினர்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை மற்றும் சுரல்மலைப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் 190-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூலை 31) குன்னூர் நகராட்சியில் நடந்த நகர்மன்றக் கூட்டத்தில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், நிலச்சரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.5 கோடி நிவாரண நிதி வழங்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் நகராட்சியில் உள்ள 30 கவுன்சிலர்களும் ஒரு மாதத்துக்கான தங்களின் அமர்வுக் கட்டணத்தை வயநாடு நிவாரண நிதிக்கு வழங்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வயநாடு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் பேசிய உறுப்பினர் ஜாகிர் உசேன், "வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு போன்று நீலகிரி மாவட்டத்திலும் ஏற்படும் அபாயம் உள்ளதால் அதனைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். எனவே, கட்டிடங்களைக் கட்ட வரன்முறைகளை அமல்படுத்தபவதுடன், வீடுகள் கட்டும்போது ஒவ்வொரு வீட்டிலும் தலா பத்து மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தையும் தீர்மானமாக கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு ஏற்படுத்தினால் வருங்காலங்களில் நிலச்சரிவு ஏற்படுவதை தவிர்க்கலாம். மேலும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், பிளாஸ்டிக் மலர்களை தவிர்க்கவும் இயற்கையான பூக்களை திருமண மண்டபங்களிலும் அரசு விழாக்களிலும் பயன்படுத்த வேண்டும்" என்று ஜாகிர் உசேன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE