சென்னை விமான நிலையத்தில் தீவிரவாதிகள் விமானத்தை கடத்த முயற்சிப்பதை தடுக்கும் பாதுகாப்பு ஒத்திகை

By சி.கண்ணன்

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் திடீரென தீவிரவாதிகள் விமானத்தை கடத்த முயற்சி செய்தால், அதனை எவ்வாறு முறியடித்து, தீவிரவாதிகளை மடக்கிப் பிடித்து, விமானத்துக்கும், பயணிகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை இன்று நடத்தப்பட்டது.

இந்த ஒத்திகையின்போது, தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் திடீரென விமான நிலையத்தின் உள் பகுதியில், பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் புகுந்துவிட்டனர். அவர்கள் சென்னையில் இருந்து புறப்பட இருக்கும் ஒரு விமானத்துக்குள் ஊடுருவி, அந்த விமானத்தை நடுவானில் கடத்த திட்டமிட்டுள்ளனர் என்ற ரகசிய தகவல் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிரடிப்படையினர், விமான பாதுகாப்புப் படை பிரிவினர், விமானக் கடத்தலை முறியடிக்கும் சிறப்பு அதிரடிப்படையினர் உள்ளிட்டோர் இயந்திரத் துப்பாக்கிகளுடன் சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதை பகுதிகளைச் சுற்றி வளைத்தனர். அப்போது கருப்பு டீ சர்ட், ஜீன்ஸ் பேன்ட் அணிந்து, அங்கு மறைந்திருந்த 4 இளைஞர்களை, இயந்திர துப்பாக்கிகள் முனையில் மடக்கிப் பிடித்தனர். பின்னர், 4 பேரையும் பலத்த பாதுகாப்புடன், வாகனம் ஒன்றில் ஏற்றி விமான நிலைய ஓடுபாதை பகுதியில் இருந்து வெளியில் கொண்டு சென்றனர்.

இந்தச் சம்பவத்தால் சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர், நடந்த சம்பவங்கள் அனைத்தும், விமான கடத்தலை தடுக்க எடுப்பதற்கான பாதுகாப்பு ஒத்திகைதான் என்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விமான நிலையத்தில் சகஜ நிலை திரும்பியது.

பாதுகாப்பு ஒத்திகை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாகவும், இதுபோன்ற ஒத்திகை 6 மாதங்களுக்கு ஒரு முறை சென்னை விமான நிலையத்தில் நடத்தப்படுகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் மத்திய உள்துறை இணைச் செயலாளர் ஆணி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், விமான பாதுகாப்புத் துறையான பிசிஏஎஸ், மத்திய தொழில் பாதுகாப்புப் படை, விமான நிறுவனங்கள், இந்திய விமான நிலைய ஆணையம், மத்திய உளவுப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE