ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கரூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 2வது நாளாக நேற்று விசாரணை நடந்த நிலையில் இரவு 12.25 மணிக்கு நீதிபதி பரத்குமார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மறு உத்தரவு வரும் வரை நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

கரூர் நகர காவல் நிலையத்தில் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் அளித்த புகாரின் பேரில் போலி சான்றிதழ் வழங்கி பத்திரப்பதிவு செய்ததாக 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த ஜூன் 9-ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என்பதால் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். கடந்த ஜூன் 12-ம் தேதி மனு விசாரணைக்கு வந்த நிலையில் விஜயபாஸ்கர் தலைமறைவானார்.

இதற்கிடையில் இவ்வழக்கு கடந்த ஜூன் 14-ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதாரர் சேகர், இவ்வழக்கில் நில பத்திரப்பதிவு செய்வதற்கு தொலைந்த ஆவணத்தை கண்டு பிடிக்க முடியவில்லை என நான் ட்ரேஷபில் சான்றிதழ் வழங்கிய அப்போதைய வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிருதிவிராஜ் ஆகியோர் பெயர்கள் சேர்க்கப்பட்டன.

இந்நிலையில் நில உரிமையாளர் ஷோபனாவின் தந்தை பிரகாஷ் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் கடந்த ஜூன் 14ம் தேதி அளித்த புகார்கள் அடிப்படையில் வாங்கல் காவல் நிலையத்தில் ஜூன் 22ம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீண் உள்ளிட்ட 13 பேர் மீது ஆள் கடத்தல், கொலை மிரட்டல், மோசடியான பத்திரப்பதிவு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனு கடந்த ஜூன் 25ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டயடுத்து தலைமறைவாக இருந்த விஜயபாஸ்கரை சிபிசிஐடியினர் தேட தொடங்கினர். இதற்கிடையில் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் உடன் இருக்கவேண்டும் என இரு வழக்குகளிலும் முன் ஜாமீன் கேட்டு விஜயபாஸ்கர் அவரது சகோதரர் சேகர் தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் ஜூலை 6ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

சிபிசிஐடி போலீஸார் ஜூலை 5, 7, 11-ம் தேதிகளில் விஜயபாஸ்கர் வீடு, நிறுவனங்கள், அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். மேலும் அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளை சிபிசிஐடி அலுவலத்திற்கு அழைத்த வந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கடந்த ஜூலை 16-ம் தேதி கேரள மாநிலம் திருச்சூரில் விஜயபாஸ்கரை சிபிசிஐடியினர் கைது செய்தனர். மேலும் அவருடன் இருந்த பிரவீணையும் கைது செய்தனர். திருச்சி மத்திய சிறையில் இருந்த விஜயபாஸ்கர் வாங்கல் புகாரிலும் ஜூலை 17ல் கைது செய்யப்பட்டார்.

ஜூலை 22ம் தேதி முதல் இரு நாட்கள் சிபிசிஐடியும், இரு நாட்கள் வாங்கல் போலீஸாரும் விஜயபாஸ்கர், பிரவீணிடம் விசாரணை நடத்திய நிலையில் ஜூலை 26ம் தேதி மீண்டும் சிறையில் அடைத்தனர். வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டராக இருந்த பிருதிவிராஜ் ஜூலை 16ம் தேதி இரவு கைது செயயப்பட்டு கரூர் நீதிமன்றத்தில ஜூலை 17ம் தேதி ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிபிசிஐடி போலீஸார் கடந்த 25-ம் தேதி முதல் இரு நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

இவ்விரு வழக்குகளில் விஜயபாஸ்கர், பிரவீண் ஆகியோரின் ஜாமீன் மனு ஜூலை 29-ம் தேதி விசாரணை தொடங்கிய நிலையில், சிபிசிஐடி வழக்கில் இன்ஸ்பெக்டர் பிருதிவிராஜ் ஜாமீன் மனு விசாரணையும் நடைபெற்றது. 2வது நாளாக நேற்று விசாரணை நடந்த நிலையில் இரவு 12.25 மணிக்கு நீதிபதி பரத்குமார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மறு உத்தரவு வரும் வரை நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் ஜாமீன் தொகையாக ரூ.25,000 செலுத்தவேண்டும். நாள்தோறும் வாங்கல் காவல் நிலையத்தில் ஒரு முறையும், கரூர் சிபிசிஐடி அலுவலத்தில் காலை, மாலை இரு வேளை கையெழுத்திடவேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தார். இதே போல் பிரவீண் மற்றும் பிருதிவிராஜுக்கும் மறு உத்தரவு வரும் வரை நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE