தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வென்ற 589 தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை: அமைச்சர் உதயநிதி வழங்கினார்

By செய்திப்பிரிவு

சென்னை: தேசிய அளவிலான போட்டிகளில் வென்ற 589 தமிழக விளையாட்டுவீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பல்வேறு தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்று பதக்கங்களை வென்ற 589 விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ரூ.13.98 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகைகளை விளையாட்டு வீரர்களுக்கு வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களை அடுத்து அதிக விளையாட்டு வீரர்களை அனுப்பி இருக்கும் மாநிலம் தமிழகம். அதன்படி தமிழகத்தில் இருந்து மட்டும் 11 வீரர், வீராங்கனைகள், 6 மாற்றுத்திறனாளிகள் உட்பட மொத்தம் 17 பேர் பாரிஸ் ஒலிம்பிக்விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இந்த 17 வீரர்களுக்கும் ரூ.1.19 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பதக்கப் பட்டியலில் உங்களுடைய பெயர்களும் ஒரு நாள் வரும். தமிழ்நாடு அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடுகுறித்து தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதையொட்டி முதல்கட்டமாக விரைவில் 50 வீரர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கவுள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் விளையாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, கால்பந்து வீராங்கனை இந்துமதி, ஒலிம்பிக் வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ரூ.1.08 கோடி பெற்ற எஸ்ஆர்எம்: இந்த விழாவில் எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் ரூ.1 கோடியே8 லட்சத்து 99,000 அமைச்சரிடம் இருந்து பெற்றுள்ளனர்.

வூஷு வீரர் ரூ.9 லட்சம், சைக்கிள் வீராங்கனை ரூ.9 லட்சம், மகளிர் செஸ் அணி ரூ.6 லட்சம், ஆடவர் செஸ் அணி ரூ.15 லட்சம், டேபிள் டென்னிஸ் மகளிர்அணி ரூ.12 லட்சம், ஆடவர் பால் பாட்மிண்டன் அணி ரூ.15 லட்சம், ஆடவர்வாலிபால் அணி ரூ.17.50 லட்சம், பாட்மிண்டன் ஆடவர் மற்றும் மகளிர் அணி ரூ.8.49 லட்சம், மகளிர்வாலிபால் அணி ரூ.9 லட்சம், மகளிர்கூடைப்பந்து அணி ரூ.8 லட்சம் ஊக்கத்தொகையை பெற்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE