சென்னை டிபிஐ வளாகம் முன்பு முற்றுகை போராட்டம்: 2-வது நாளாக 1000+ ஆசிரியர்கள் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: அரசாணை 243 ரத்து உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற 1,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

பதவி உயர்வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்துசெய்வது, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகம் முன்பு 3 நாட்கள் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ-ஜாக்) அறிவித்திருந்தது.

அதன்படி, கடந்த 29-ம்தேதி டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற 1,700-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஆசிரியர்கள் 2-வது நாளாக நேற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால், முன்னெச்சரிக்கையாக டிபிஐ வளாகத்தை சுற்றிலும் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால், போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆசிரியர்கள் அனைவரும் டிபிஐ நுழைவுவாயில் பகுதியிலேயே கைது செய்யப்பட்டனர். தவிர, இப்போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வந்த ஆசிரியர்களை ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களிலேயே போலீஸார் கைது செய்து, அருகே உள்ள சமூக நலக்கூடங்களுக்கு கொண்டு சென்றனர். அந்த வகையில், நேற்று 300 ஆசிரியைகள் உட்பட 1,000 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் டிட்டோ-ஜாக் உயர்நிலை குழு உறுப்பினர் வின்சென்ட் பால்ராஜ் கூறியதாவது: அரசாணை 243-க்கு ஆசிரியர்கள் ஆதரவு அதிகம் இருப்பதுபோல மாய தோற்றம் உருவாக்கப்படுகிறது. உண்மையில், சுமார் 90 சதவீத ஆசிரியர்கள் இந்த அரசாணைக்கு எதிர்ப்பாகதான் உள்ளனர். எனவே. அரசாணை 243-ஐ பள்ளிக்கல்வித் துறை முழுமையாக ரத்து செய்யவேண்டும். இதேபோல, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரிசெய்வது உள்ளிட்ட இதர கோரிக்கைகளையும் வலியுறுத்தி போராடி வருகிறோம்.

ஏற்கெனவே அறிவித்தபடி, 3-வது நாளாக 31-ம் தேதியும் (இன்று) முற்றுகை போராட்டம் நடைபெறும். மாநில நிர்வாகிகள் தலைமையில் இப்போராட்டம் பெரிய அளவில் நடத்தப்படும். எங்கள் கோரிக்கைகளை அரசுநிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், அடுத்தகட்ட போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டமைப்பு வேண்டுகோள்: இதனிடையே இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவருமான செ.நா.ஜனார்த்தனன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

இப்பிரச்சினையில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். உரிமைகளுக்காக வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடும் லட்சக்கணக்கான ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை உரிய முறையில் பேச்சுவார்த்தை செய்து, தீர்க்க வேண்டுகிறோம். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து கைது செய்து அடக்கிவிடலாம் என்ற நினைத்தால் தமிழகஅரசுக்கு எதிராக ஒட்டுமொத்த ஆசிரியர், அரசு ஊழியர் அமைப்புக்களும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE