43-வது முறையாக 120 அடியை எட்டியது மேட்டூர் அணை: கால்வாய் பாசனத்துக்கு நீர் திறப்பு

By த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அணை 43-வது முறையாக தனது முழு கொள்ளவான 120 அடியை செவ்வாய்க்கிழமை மாலை எட்டியது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து மொத்தம் 81,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடக அணைகள் நிரம்பியது. அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதையடுத்து காவிரியில் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு, கடந்த 16-ம் தேதி முதல் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. அப்போது, 43 அடியாக இருந்த நீர்மட்டம், கடந்த 27-ம் தேதி 100 அடியை 71-வது முறையாக எட்டியது. பின்னர், அணையின் நீர் மட்டம் 110.76 அடியை எட்டியபோது, டெல்டா பாசனத்துக்கு கடந்த 28-ம் தேதி நீர் திறக்கப்பட்டது.

அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருந்ததால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் எட்டியது. மேட்டூர் அணை வரலாற்றில் 43-வது தடவையாக, நீர்மட்டம் 120 அடியை எட்டி சாதனை படைத்தது. இதையடுத்து, எச்சரிக்கை ஒலி எழுப்பட்டு, மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகு வழியாக, விநாடிக்கு 60,000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

உபரிநீர் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளதால், மேட்டூர், பூலாம்பட்டி உள்ளிட்ட காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி, வருவாய்துறையினர் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ம் தேதி அணை 120 அடியாக இருந்தது. அதன் பின்னர், இன்று மீண்டும் அணை முழு கொள்ளவான 120 அடியை எட்டியது. கடந்த 2022-ம் ஆண்டுக்கு பிறகு, மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது, டெல்டா பாசன விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 16 கண் மதகு வழியாக நீர் திறக்கப்பட்டதை அறிந்த சுற்றுவட்டார மக்கள், கூட்டம் கூட்டமாக வந்து மேட்டூர் அணையை ஆர்வமுடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.

கால்வாய் பாசனத்துக்கு திறப்பு: இதனிடையே, மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க, சேலம் எம்பி செல்வகணபதி, சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜேந்தின் மற்றும் விவசாய சங்கத்தினர் ஆகியோர் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மேட்டூர் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி இன்று மாலை 4.30 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து, கால்வாய் பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்தார். கால்வாய் பாசனத்துக்கு தொடக்கத்தில், விநாடிக்கு 250 கன அடி திறக்கப்பட்ட நிலையில் படிப்படியாக அதிகரித்து 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

டெல்டா பாசனத்துக்கு 21,500 கன அடி: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த 28-ம் தேதி விநாடிக்கு 12,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. பின்னர், திங்கள்கிழமை மாலை முதல் 23,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை முதல் 21,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு இன்று மாலை விநாடிக்கு 54,459 கன அடியாகவும், நீர்மட்டம் 120 அடி, நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக இருந்தது. 16 கண் மதகு வழியாக, 60,000 கன அடியும், நீர் மின் நிலையம் வழியாக 21,500 கன அடி என மொத்தமாக காவிரி ஆற்றில் 81,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன், மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம், சார் ஆட்சியர் பொன்மணி, நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தயாளகுமார், கண்காணிப்பு பொறியாளர் ராமலிங்கம், நிர்வாக செயற்பொறியாளர் சிவக்குமார், சரபங்கா வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஆனந்தன், உதவி செயற்பொறியாளர்கள் மதுசூதனன், செல்வராஜ், உதவி பொறியாளர் சதிஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE