புதுடெல்லி: மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி, அனைவருக்கும் அனைத்து வளர்ச்சி திட்டங்கள் (சப்கே சாத் சப்கா விகாஸ்) என்பது வெறும் நடிப்பு என்று கூறினார்.
நாடாளுமன்ற மக்களவையில் மத்திய பட்ஜெட் 2024 மீதான விவாதத்தில் கலந்துகொண்டு ராமநாதபுரம் எம்பி கே.நவாஸ்கனி பேசியது: “தமிழ்நாடு என்ற மாநிலம் இந்தியாவில் இருப்பது மத்திய அரசுக்கு தெரியுமா, தெரியாதா என்ற சந்தேகத்தை இந்த நிதி நிலை அறிக்கை எழுப்புகிறது. தங்களுடைய ஆட்சியை காப்பாற்றுவதற்கு இந்த நாட்டினுடைய கூட்டாட்சி தத்துவத்தை மத்திய அரசு காக்க தவறி இருக்கிறது . உங்களுக்கு வாக்களிக்காத மாநிலங்களின் மீதான கோபத்தை வெளிப்படுத்தக் கூடியதாகவே இந்த பட்ஜெட் இருக்கிறது.
கடை தேங்காயை எடுத்து வழியில் வந்த யானைக்கு உண்ணக் கொடுப்பது போல, பொதுமக்களின் வரிப்பணத்தை எடுத்து உங்களுடைய ஆட்சியை காப்பதற்காக ஆந்திர பிரதேசத்துக்கும் பிஹாருக்கும் வாரி வாரி வழங்கி இருக்கிறீர்கள். எப்போதும் ஒப்புக்கு சொல்லப்படும் திருக்குறளும் இந்த முறை இடம் பெறவில்லை. தமிழையும் தமிழ்நாட்டையும் மறந்தும் கூட நம்முடைய நிதி அமைச்சர் உச்சரிக்கவில்லை.
பாரதிய ஜனதா கட்சிக்கு தனியாக அரசியல் இருக்கலாம். தனியாக கொள்கைகள் இருக்கலாம். தனியாக சித்தாந்தங்கள் இருக்கலாம். அதனை இந்திய அரசின் மீது திணிப்பது இந்தியாவினுடைய இறையாண்மைக்கு மிகப்பெரிய ஆபத்து. எங்களிடமிருந்து பெற்ற வரிப்பணத்தில் இருந்து எங்களுக்கு உரிய பங்கை தராமல் மற்ற மாநிலங்களுக்கு வாரி இறைப்பது நியாயமா? என்று தான் கேட்கிறோம்.
» விவசாயம், வேலை வாய்ப்புகளுக்காக பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன் பதிலுரை
» ராசிபுரம் பேருந்து நிலையத்தை மாற்ற எதிர்ப்பு: உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஐகோர்ட் அனுமதி
இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பேரிடர்களுக்கு கேட்ட நிவாரண நிதியை இன்னும் வழங்கவில்லை, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்களுக்கான நிதியை இன்னும் வழங்கவில்லை. எங்களுடைய மாநிலத்துக்கு என்னவெல்லாம் தேவை என்பதை எங்களுடைய தமிழகத்தின் முதல்வர் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே பட்டியலிட்டு காண்பித்த பின்பும் தமிழகத்துக்கு என்று சிறப்பு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
சிறப்பு நிதிகளும் கொடுக்கப்படவில்லை. ஏற்கெனவே நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய திட்டங்களுக்கும் நிதி அளிக்காதது தமிழகத்துககு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி. ஏற்கெனவே இந்த அரசு அறிவித்த வேலைவாய்ப்புகளே கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றவில்லை. மிகவும் குழப்பம் விளைவிக்கக்கூடிய வகையில் இப்போது வேலைவாய்ப்பு திட்டத்தை அறிவித்திருக்கிறது. அதில் எந்த வகையில் வேலை வாய்ப்பை இளைஞர்களுக்கு அளிக்கப் போகிறீர்கள்? என்பதிலும் தெளிவில்லை.
வேலை கொடுப்பவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுப்பதாகவும், ஊதியத்தை அந்த நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதியிலிருந்து சரி செய்து கொள்ளலாம் என்றும் கூறியிருப்பது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறிய அந்த திட்டத்தைக் கூட, முறையாக காப்பி அடிக்கவில்லை. என்னுடைய நாடாளுமன்ற தொகுதி நீளமான கடற்பரப்பை கொண்ட தொகுதி.இங்கு கடல், பனை, தென்னை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கும் வண்ணம் தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கான அவசியம் உள்ளது.
அங்கு வேலைவாய்ப்பை உருவாக்குமாறு கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து கேட்டு வருகிறேன். இதுவரை அதற்கான எந்த திட்டத்தையும் இந்த அரசு அறிவிக்கவில்லை. 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்திட வேண்டும். ஊதியத்தை 400 ரூபாயாக அதிகரிக்க வேண்டும். இது கிராமப்புற வாழ்வாதாரத்துக்கான ஒரு அருமையான திட்டம். கடந்த காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம். இதனை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என கேட்டு இருக்கிறோம் . அது தொடர்பாகவும் எந்தவித அறிவிப்பும் இல்லை.
ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய எம்பிக்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ.5 கோடி என்பது போதாது. தமிழகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ரூபாய் மூன்று கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இன்று விலைவாசிகள் எல்லாம் உயர்ந்து, திட்ட மதிப்பீடுகள் எல்லாம் பெருமளவில் உயர்ந்துவிட்ட நிலையில் பல்வேறு பணிகளை செய்ய முடியாத நிலை இருக்கிறது. இந்த நிதியை 5 கோடியிலிருந்து 15 கோடியாக உயர்த்தி வழங்கிட வேண்டும்.
வழக்கம்போல சிறுபான்மை மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கை ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. 25 கோடி இஸ்லாமியர்கள் இருக்கக்கூடிய இந்த நாட்டில் அவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடமில்லை. இது, ‘சப்கே சாத் சப்கா விகாஸ்’என்ற உங்களுடைய கோஷம் வெறும் நடிப்பு என்பதை உங்களுடைய நடவடிக்கைகள் பிரதிபலிக்கிறது. சர்வதேச அளவில் மத நல்லிணக்க ஜனநாயக நாடாக நம்முடைய நாடு பார்க்கப்படுகின்றது.
பல முக்கியமான சட்டங்களை உங்களுக்கு முன்பிருந்த அரசு உருவாக்கியிருக்கிறது. அதில் ஒரு முக்கியமான சட்டம் 1991 வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டம். இதன்படி, ஒரு மதத்தின் வழிபாட்டு தலங்களை மற்றொரு மதத்தினர் உரிமை கோர முடியாது. அயோத்தியினுடைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று இந்த நாட்டின் 25 கோடி இஸ்லாமியர்கள் அமைதியை நிலைநாட்ட முன் வந்திருக்கிறார்கள். ஆனால் இந்த அரசு அமைதியை விரும்பாத அரசாக உள்ளது.
மசூதிகளுக்குள் கோயில்கள் இருக்கிறது என்றுகூறி இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலங்களில் இந்துக்களின் வழிபாட்டு முறைகளை தேடக்கூடிய ஒரு நிலையை இந்த அரசு நிறுத்த வேண்டும். ஆன்மிக அரசியல் என்ற பெயரில் மதத்தை வைத்து நீங்கள் செய்யக்கூடிய அரசியலுக்கு உங்களுக்கு அயோத்தியில், உத்தரபிரதேசத்தில் மக்கள் முடிவு கட்டி இருக்கிறார்கள். எனவே மதத்தை வைத்து அரசியல் செய்யாமல் அரசியல் சாசன சட்டப்படி நீங்கள் ஆட்சி நடத்த வேண்டும்.
எங்களுடைய தமிழக முதல்வர் வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்குமான அரசு தமிழக அரசு எனக்கூறி ஒரு சிறப்பான ஆட்சியை செய்து கொண்டிருக்கிறார். அவரைப் பின்பற்றி இந்த அரசு நடக்க வேண்டும். நீங்கள் அதிகமாக சிறப்பு நிதியை ஒதுக்கிய மாநிலங்களை விட அதிகமான ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளை தமிழகம் வழங்குகிறது. அந்த உரிமையோடு கேட்கின்றோம், எங்களுக்கான நிதியை தாருங்கள்.
இந்த நாட்டில் அதிகமான மருத்துவர்களை உருவாக்கி அதிகமான மருத்துவ சேவையை செய்து கொண்டிருக்கக் கூடிய ஒரு மாநிலம் தமிழகம். அதனை பொறுத்துக் கொள்ள முடியாத இந்த அரசு நீட் என்ற தடை தேர்வை உருவாக்கி, திறமையான மாணவர்களுடைய எதிர்காலத்தை பாழாக்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் சட்டசபையில் பாஜகவை தவிர எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்று அனைத்து உறுப்பினர்களும் இணைந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பினார்கள். அதற்கு ஒப்புதல் அளித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்,” என்று அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago