45 அடியை நெருங்கும் முன்பே சிறுவாணி அணையில் இருந்து மீண்டும் நீரை வெளியேற்றிய கேரள அரசு!

By டி.ஜி.ரகுபதி 


கோவை: 45 அடியை நெருங்குவதற்குள் சிறுவாணி அணையிலிருந்து கேரளா நீர்வளத்துறை அதிகாரிகள் மீண்டும் தண்ணீரைத் திறந்து வெளியேற்றியுள்ளனர்.

கோவை மாநகராட்சியின் 30 வார்டுகளுக்கும், சாடிவயல் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து மாநகராட்சிக்கு வரும் வழித்தடத்தில் உள்ள 22-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் சிறுவாணி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கேரளாவில் அமைந்துள்ள சிறுவாணி அணையின் பராமரிப்பு கேரள அரசின் நீர்வளத்துறை வசம் உள்ளது. அணை பாதுகாப்பு காரணங்களால் 49.53 அடிக்கு பதில் 45 அடி வரை மட்டுமே கேரள அரசால் தண்ணீர் தேக்கப்படுகிறது.

நடப்பு தென்மேற்கு பருவமழைக் காலத்தில் அணை மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, சிறுவாணி அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தீவிரமாக பெய்யும் பருவமழையால் நடப்பாண்டு இந்நேரம் சிலமுறை சிறுவாணி அணை நிரம்பியிருக்க வேண்டும். ஆனால், 43 முதல் 44 அடி வந்தவுடன் சிறுவாணி அணையில் இருந்து பின்பக்க மதகு வழியாக, வனவிலங்குகளுக்கு தண்ணீர் செல்லும் பாதையில் கேரளா நீர்வளத்துறை அதிகாரிகள் தண்ணீரை திறந்துவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

கடந்த வாரம் சில நாட்கள் இவ்வாறு நீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி ஆணையர், குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் குழுவினர் உள்ளிட்டோர் சிறுவாணி அணைக்குச் சென்று ஆய்வு செய்தனர். இந்நிலையில், மீண்டும் சிறுவாணி அணையிலிருந்து கேரள அதிகாரிகள் தண்ணீரைத் திறந்து விட்டுள்ளனர். நேற்று சிறுவாணி அணை மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

அணைப் பகுதியில் 162 மி.மீட்டரும், அடிவாரத்தில் 85 மி.மீட்டரும் மழை பதிவானது. தொடர் மழையால் நீர்மட்டம் உயர்ந்து வந்த நிலையில், சில மணி நேரங்கள் பின்பக்க மதகு வழியாக, அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது. முன்னரே, நீர்க்கசிவு காரணமாக தினமும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் அணையிலிருந்து வெளியேறி வீணாகி வருகிறது. இச்சூழலில், அணை 45 அடியை நெருங்குவதற்குள் தண்ணீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்படுவதால், கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும்போது, "நேற்று சில மணி நேரங்கள் சிறுவாணி அணையிலிருந்து கேரளா அதிகாரிகள் தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 44.08 அடியாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையிலிருந்து 101.58 எம்.எல்.டி தண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதால், சிறுவாணி அணையில் நீர் குறைந்து தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. ஏனெனில் மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது" என்று அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE