வயநாடு நிலச்சரிவில் சிக்கி கூடலூரைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழப்பு

By ஆர்.டி.சிவசங்கர்


கூடலூர்: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரும் உயிரிழந்தார்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 80 பேர் வரை உயிரிழந்துள்ளனர். காணாமல் போன பலரை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்த துயரச் சம்பவம் நாட்டையே பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. வயநாடு நீலகிரி மாவட்டத்தை ஒட்டியுள்ளதால், நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாவைச் சேர்ந்த பலர் தினமும் பணி நிமித்தமாக வயநாடு சென்று வருகின்றனர்.

அப்படிச் சென்றவர்களில் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி மற்றும் சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, கூடலூர் புளியம்பாறையைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர் உயிரிழந்துள்ளார். காளிதாஸ், உறவினர் வீட்டில் தங்கி கட்டிட வேலை செய்து வந்துள்ளார். அவர் நிலச்சரிவில் உயிரிழந்துள்ளது உறுதியாகி உள்ளது. நிலச்சரிவிருந்து மீட்கப்பட்ட காளிதாஸின் உடல் பிரேத பரிசோதனைக்காக வயநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கூடலூர் முன்னாள் எம்எல்ஏ-வான திராவிட மணி தலைமையில் திமுகவினர் வயநாடு அரசு மருத்துவமனைக்குச் சென்று, காளிதாஸின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது உடலை கூடலூர் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE