ஆக.2-ல் புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (ஜூலை 31) தொடங்குகிறது. முதல் நாளில் பேரவையில் ஆளுநர் உரையாற்றுகிறார். ஆகஸ்ட் 2-ம் தேதி மாநில பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி பேரவையில் தாக்கல் செய்கிறார்.

புதுவை சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்குகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில், துணை நிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உரையாற்றுகிறார். இதற்காக ஆளுநர் மாளிகையிலிருந்து கார் மூலம் காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவைக்கு அவர் வருகிறார். அங்கு அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து பேரவைத் தலைவர் செல்வம், ஆளுநரை வரவேற்று மைய மண்டபத்துக்கு அழைத்து வருகிறார். அங்கு பேரவைத் தலைவர் இருக்கையில் ஆளுநர் அமர்கிறார். தமிழ்தாய் வாழ்த்துடன் சபை நிகழ்வுகள் தொடங்கும்.

தொடர்ந்து ஆளுநர் உரையாற்றி பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி வைக்கிறார். புதுவையில் தொடர்ச்சியாக தமிழ் தெரிந்த ஆளுநர்கள் பதவி வகித்து வருகின்றனர். ஏற்கெனவே ஆளுநராக இருந்த தமிழிசையும் தமிழிலில் உரையாற்றினார்.அதேபோல் இந்த ஆண்டும் தமிழிலேயே சி.பி.ராதாகிருஷ்ணன் ஆளுநர் உரையாற்ற உள்ளார். ஆளுநர் உரையாற்றிச் சென்றதும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்படுகிறது.

வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி வியாழக்கிழமை, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசுகின்றனர். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2-ம் தேதி வெள்ளிக்கிழமை, நிதி பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE