வீணாக கடலில் கலக்கும் மழைநீரை சேமிக்க என்ன திட்டம் உள்ளது? - சென்னை ஐகோர்ட் கேள்வி

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: பருவமழைக் காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க என்ன திட்டம் உள்ளது என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

பருவமழைக் காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைக்கும் வகையில், சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள ஆறுகள், ஏரிகள், அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளை சீரமைத்து அவற்றை ஆழப்படுத்தவும், தண்ணீர் விரயமாவதை தடுக்கவும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் பி. ஜெகன்நாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தலைநகரான சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பருவமழை காலங்களில் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை அருகில் உள்ள ஏரிகளுக்கு ஏன் திருப்பிவிட்டு அவற்றை பாதுகாக்கக்கூடாது?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசு ப்ளீடர் எட்வின் பிரபாகர், “நீர்வளத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே தனியாக துறை உருவாக்கப்பட்டுள்ளது. குடிநீர், விவசாயம் மற்றும் இதர தேவைகளுக்கான தண்ணீரை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்படும்” என்றார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு பருவமழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் நீரை பாதுகாத்து, சேமிக்க என்ன திட்டம் உள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மழை நீரை ஏரி, குளங்களுக்கு திருப்பிவிடுவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும் . தமிழகத்தில் , நீர்வளத்துறை உருவாக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE