கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி ‘பந்த்’ - ஆர்.பி.உதயகுமார் உள்பட 520 பேர் கைது

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்றக் கோரி, திருமங்கலத்தில் இன்று (ஜூலை 30) முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினரும், சுங்கச்சாவடி எதிர்ப்பு போராட்டக்குழு தலைமையில் பொதுமக்களும் ‘பந்த்’ போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 520 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஆரம்பம் முதலே எழுந்த குற்றச்சாட்டு: மதுரை - திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் மதுரை அருகே கப்பலூரில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்துக்கு சொந்தமான சுங்கச்சாவடி 2012-ல் அமைக்கப்பட்டது. இந்த சுங்கச்சாவடி, 60 கி.மீ., தொலைவுக்குள் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மீறி அமைக்கப்பட்டுள்ளதாக ஆரம்பம் முதலே குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

திருநெல்வேலி நான்கு வழிச்சாலையை பயன்படுத்துவோர் மட்டுமே இந்த சாலைக்காக சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், இந்த சாலையை பயன்படுத்தாத திருமங்கலம் சுற்றுவட்டார கிராம மக்கள், தென்காசி, ராஜபாளைம் செல்வோரும் கட்டணம் செலுத்திச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதுபோல், கப்பலூர் சிப்காட் தொழிற்சாலை வளாகம், சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ளதால் தொழிற்சாலைகளுக்குச் செல்லக்கூடியவர்களும் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டது.

தொடர் போராட்டங்கள்: இதனால், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு, சட்டம் - ஒழுங்கு பிரச்சினையும் ஏற்பட்டு வந்தது. இந்த சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்பது திருமங்கலம் சட்டமன்ற தொகுதி கிராம பொதுமக்கள், வணிகர்கள், கப்பலூர் தொழில்துறையினர் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.போராட்டத்துக்கு தற்காலிக தீர்வாக, 2020-ம் ஆண்டு முதல், உள்ளூர் மக்களின் வாகனங்கள் இந்த சுங்கச்சாவடியில் கட்டணமில்லாமல் அனுமதிக்கப்பட்டு வந்தது.

கடந்த 10-ம் தேதி முதல் திடீரென்று, கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கும் 50 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த திருமங்கலம் சுற்றுவட்டார கிராம மக்கள், தொழில்துறையினர், ஆட்டோ, சரக்கு வாகன ஓட்டிகள், அதிமுகவினர், கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு போராட்டக் குழுவினர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டங்களில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு போராட்டக் குழுவையும், தொழில் துறையினரையும் அழைத்து அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், நான்கு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று (ஜூலை 29) நடந்த கடைசிக்கட்ட பேச்சுவார்த்தையில் அமைச்சர் பி.மூர்த்தி, 2020-ம் ஆண்டு நடைமுறைப்படி உள்ளூர் வாகன ஓட்டிகள், ஆதார் கார்டை காட்டினால் சுங்கச்சாவடியில் கட்டணமில்லாமல் அனுமதிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்து, அதற்கான உத்தரவையும் வெளியிட்டார்.

ஆனால், சுங்கச்சாவடி எதிர்ப்பு போராட்டக் குழுவினரும், அதிமுகவினரும் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று முறையிட்டனர். அதனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டக் குழுவினர் பேச்சுவார்த்தையை புறக்கணித்துச் சென்றனர். அவர்கள் திட்டமிட்டப்படி இன்று திருமங்கலம் பகுதியில் உண்ணாவிதரம், முழு கடையடைப்பு, கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை, சாலைமறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தள்ளுமுள்ளு: திருமங்கலம் தொகுதி எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர், சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி அதன் அருகே உண்ணாவிரதம் இருந்தனர். போலீஸார், ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிமுகவினர் 150 பேரை கைது செய்தனர். அப்போது அதிமுகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், அதிமுகவினர் மற்றும் போராட்டக் குழுவைச் சேர்ந்த பலரின் செல்போன்கள் உடைந்தன. பலருக்கும் சட்டை கிழிந்து போலீஸாருடன் வாக்குவாதம் முற்றியதால் பதற்றம் ஏற்பட்டது. போலீஸாரை கண்டித்து அதிமுவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்து மேலக்கோட்டை திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். அங்கும் அவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

காவல்துறை கட்டுப்பாட்டுக்குள்... - இந்நிலையில், சுங்கச்சாவடியை முற்றுகையிட வந்த சுங்கச்சாவடி எதிர்ப்பு போராட்டக் குழுவினரையும், பொதுமக்களையும் போலீஸார், கைது செய்து அழைத்துச் சென்றனர். ஒட்டுமொத்தமாக கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்ற 520 பேரை போலீஸார் கைதுசெய்தனர். மேலும், பலரை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

பொதுமக்கள், கடையடைப்பு, வேலைநிறுத்தம், கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகைப் போராட்டத்தால் திருமங்கலம் பகுதியில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். அவர்கள் கப்பலூர் சுங்கச்சாவடியை தங்கள் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சுங்கச்சாவடி பகுதி போர்க்களமாக மாறியதால் திருமங்கலம் வழியாக மதுரையை நோக்கி வந்த வாகனங்களும், திருநெல்வேலி, தென்காசி வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.

முதல்வர் கவனம் செலுத்துவாரா? - இது தொடர்பாக சுங்கச்சாவடி எதிர்ப்பு போராட்டக் குழுவினர் கூறுகையில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சித்தலைவராக இருந்தபோது மதுரை ஒத்தக்கடையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கப்பலூர் சுங்கச்சாவடி வீடியோவை வெளியிட்டு மக்கள், வாகன ஓட்டிகள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஒவ்வொரு நாளும் படும் சிரமங்களையும், அதிமுக அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்தி சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்காததை பற்றியும் கவலையுடன் பகிர்ந்தார். திமுக ஆட்சிக்கு வந்ததும், கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற உறுதியாக நடவடிக்கை எடுப்பேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால், திமுக ஆட்சி அமைந்து 3 ஆண்டுகளாகியும் கப்பலூர் சுங்கச்சாவடியை பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருமுறை கூட கருத்துத் தெரிவிக்கவில்லை. கப்பலூர் சுங்கச்சாவடியில் அடிக்கடி நடக்கும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை, மக்கள் போராட்டம் போன்றவை அவரின் கவனத்துக்கு சென்றதா? என தெரியவில்லை. முதல்வர், சிறப்புக் கவனம் செலுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இந்த சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வேண்டும்,” என்றனர்.

‘அடக்கு முறையை ஏவி விடுகிறார்கள்’ - கைதான முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், “அதிமுக ஆட்சியில் உள்ளூர் மக்களுக்கு இந்த சுங்கச்சாவடியில் முழு கட்டண விலக்கு அளிக்கப்பட்டது. 2021ம் ஆண்டிலிருந்து கட்டண விதிமுறை தளர்த்தப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு மக்களை கசக்கிப் பிழிகிறார்கள். போராடினால் மக்கள் மீது அடக்குமுறை ஏவிவிடுவார்கள். மேலும், சுங்கச்சாவடி அபராத கட்டண நோட்டீஸ் விடப்பட்டு ரூ.2 லட்சம் முதல், ரூ.20 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலூர் டோல்கேட் விதிமுறையை மீறி அமைக்கப்பட்டதால் அதை வேறு இடத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் போராட்டம் செய்து வருகிறோம். இதுவரை நான் 22 மனுக்களை அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளேன் எந்தத் தீர்வும் காணப்படவில்லை,” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்