8 மணி நேர பணி போராட்டம்: ‘ஜூலை 30’ தியாகிகளுக்கு புதுச்சேரி தொழிற்சங்கத்தினர் அஞ்சலி

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: ஆசியாவில் முதன் முதலில் 8 மணி நேர பணிக்கான போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த ‘ஜூலை 30’ தியாகிகளுக்கு புதுச்சேரியில் தொழிற்சங்கத்தினர் இன்று (செவ்வாய்க்கிழமை) அஞ்சலி செலுத்தினர்.

முந்தைய காலத்தில் புதுவையில் இயங்கிய பஞ்சாலைகளில் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டார்கள். அப்போதெல்லாம் குறைவான கூலிக்கு தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது.

இதனை எதிர்த்தும் 8 மணி நேர வேலையை அமல்டுத்த வலியுறுத்தியும் வ.சுப்பையா தலைமையில் புதுச்சேரி சவானா பஞ்சாலையில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். 84 நாட்கள் நடைபெற்ற போராட்டத்துக்கு பின் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் அமலாகவில்லை.

இதையடுத்து 1936 ஜுலை 23-ம் தேதியிலிருந்து உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தைத் தொழிலாளர்கள் தொடங்கினார்கள். 1936 ஜுலை 30-ம் நாள் நடந்த போராட்டத்தில் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதன் விளைவாக 1937 ஏப்ரல் 6-ம் தேதி பிரெஞ்ச் இந்தியாவுக்கான தொழிற்சங்கச் சட்டம் இயற்றப்பட்டது.

அதன்படி தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலையும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையும் வழங்கப்பட்டது. ஆசிய நாடுகளிலேயே 8 மணி நேர வேலை என்பது புதுவையில் தான் முதன்முதலில் அமலாக்கப்பட்டது. அத்துடன் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தம், ஓய்வுக் கால ஊதியம், பெண் ஊழியர்களுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் சமூகப் பயன் அளிக்கும் திட்டங்களும் வரையறுக்கப்பட்டன.

இதனையடுத்து தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான பணி நேரம் 8 மணி நேரமாக நிர்ணையிக்கப்பட்டது. இதையடுத்து 8 மணி நேர வேலை என்பது பல்வேறு நாடுகளில் சட்டமானது. 8 மணி நேர வேலையை வலியுறுத்தி தியாகிகள் உயிர் தியாகம் செய்த ஜூலை 30-ம் நாள் புதுச்சேரியில் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 88-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது.

புதுவை பஞ்சாலை தொழிலாளர்கள் சங்க செயலாளர் மூர்த்தி தலைமையில் மறைமலை அடிகள் சாலை சுதேசி மில் அருகே இருந்து புறப்பட்ட ஊர்வலம் தியாகிகள் சதுக்கத்தை அடைந்தது. அங்கு மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர். ஏஐடியுசி மாநிலத் தலைவர் தினேஷ் பொன்னையா உறுதி மொழி வாசித்தார். இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் தியாகிகள் கொடியை ஏற்றினார். கன்னியப்பன் ஏஐடியுசி கொடியை ஏற்றினார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சலீம், முன்னாள் எம்எல்ஏ-வான நாரா கலைநாதன், ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் சேது செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஏரளமான தொழிலாளர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல், சிஐடியு மாநிலத் தலைவர் பிரபு ராஜ், செயலர் சீனுவாசன் தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் சிபிஎம் மாநிலச் செயலர் ராஜாங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE