ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்: அன்புமணி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்க முனையாமல், அவர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளில் சாத்தியமான சிலவற்றையாவது முதல்கட்டமாக நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியுள்ளதாவது: பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ஆசிரியர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது. ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து பேச்சு நடத்த வேண்டிய அரசு, அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு அதன் கோர முகத்தை காட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்; தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 30 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அவற்றில் ஒரு கோரிக்கையைக் கூட நிறைவேற்றாத தமிழக அரசு, கடந்த ஆண்டு டிசம்பர் 21-ஆம் நாள் 243 என்ற எண் கொண்ட அரசாணையை பிறப்பித்து, அவர்களின் பதவி உயர்வு வாய்ப்புகளை பறித்துள்ளது.

ஏற்கெனவே வலியுறுத்தப்பட்டு வந்த 30 கோரிக்கைகளுடன், அரசாணை எண் 243-ஐ நீக்க வேண்டும் என்ற புதிய கோரிக்கையையும் சேர்த்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தான் தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான டிட்டோ ஜாக் ஜூலை 29, 30, 31 ஆகிய 3 நாட்களும் பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தது.

முதல் நாள் முற்றுகையிடும் போராட்டத்தை தொடங்குவதற்காக பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தை நெருங்குவதற்கு முன்பாகவே ஆசிரியர் சங்க நிர்வாகிகளை காவல்துறை மூலம் கைது செய்து அப்புறப்படுத்தியுள்ளது காவல்துறை. மீதமுள்ள இரு நாட்களுக்கான போராட்டத்தின் போதும் இதே அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதற்கு தமிழக அரசும், காவல்துறையும் திட்டமிட்டிருக்கின்றன. அடக்குமுறைகள் மூலம் போராட்டங்களையும், கோரிக்கை முழக்கங்களையும் முடக்கி விடலாம் என்று நினைத்தால் மண்ணைக் கவ்வப் போவது தமிழக அரசு தானே தவிர, ஆசிரியர் இயக்கங்கள் அல்ல.

எதிர்காலத் தலைமுறையினரை அறிவார்ந்த சமுதாயமாக உருவாக்குவது ஆசிரியர்கள் தான். அதிலும், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இதில் சிறப்புப் பங்கு உண்டு. இத்தகைய பெருமை கொண்ட ஆசிரியர்கள் அவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் இறங்கி போராடுவதையே தங்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பாக அரசு கருத வேண்டும்.

ஆசிரியர்கள் போராட்ட அறிவிப்பு வெளியிட்ட உடனே அவர்களை அழைத்து அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்தி, இயன்ற வரை கோரிக்கைகளை நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு முறை ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய போதும், அவர்களின் கோரிக்கைகளை அடுத்த சில மாதங்களில் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கும் அரசு, அதன்பின் அந்தக் கோரிக்கைகளை கண்டு கொள்வதே இல்லை. அடுத்த முறை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தும் போதும் அதே அணுகுமுறையை கடைபிடித்து மீண்டும், மீண்டும் ஏமாற்றுகிறது.

புதிய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட சிக்கல்களால் ஆசிரியர்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில், 243-&ஆம் அரசாணை அவர்களின் பாதிப்புகளையும், அதனால் ஏற்படும் துயரங்களையும் அதிகப்படுத்தியுள்ளது. 243-ஆம் அரசாணையால் அதிகபட்சமாக 5000 பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் தான் பயனடைவர். ஆனால், இந்த அரசாணையால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர். இதை உணர்ந்து ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

எந்த ஒரு போராட்டத்தையும் அடக்குமுறை மூலம் முறியடித்து விடலாம் என்று அரசு நினைக்கக்கூடாது. தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் அடக்குமுறைகள் தொடர்ந்தால், அவர்களுக்கு ஆதரவாகவும், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் எச்சரித்திருக்கிறது.

எனவே, ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்க முனையாமல், அவர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளில் சாத்தியமான சிலவற்றையாவது முதல்கட்டமாக நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்