சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: பிரபல சினிமா தயாரிப்பாளரான ரவீந்தர் வீட்டில் இன்று (ஜூலை 30) காலை முதல் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக இந்த சோதனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை - அசோக் நகர் 19-வது அவென்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரபல சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன். இவர் பிரபல சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை அண்மையில் திருமணம் செய்து கொண்டார்.‌ லிப்ரா புரொடக்‌ஷன் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் இவர், கடந்த 2020-ம் ஆண்டு தொழிலதிபர் பாலாஜி என்பவரிடம் நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் புதிய சுற்றுச்சூழல் திட்டத்தில் முதலீடு செய்யுமாறு கூறி 16 கோடி ரூபாய் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட தொழிலதிபர் பாலாஜி இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மீது புகார் அளித்தார்.‌ புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 16 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக கூறி ரவீந்தர் சந்திரசேகரனை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்‌‌. பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்‌.

இந்நிலையில், இவ்வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அசோக் நகரில் உள்ள சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.‌ சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE