மதுரை: ஆதார் அட்டையை காட்டினால் திருமங்கலம் பகுதி உள்ளூர் மக்கள், கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டணமில்லாமல் செல்லலாம் என சுங்கச்சாவடி எதிர்ப்புப் போராட்டக் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது அமைச்சர் பி.மூர்த்தி உறுதி அளித்தார்.
மதுரை திருமங்கலம் அருகே நான்குவழிச் சாலையில் கப்பலூர் ‘சுங்கச்சாவடி’ அமைத்துள்ளது. இது விதிகளை மீறி அமைத்துள்ளதாக திரு மங்கலம் சுற்றுவட்டார மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதனால், அவர்கள் இந்த ‘சுங்கச்சாவடி’யை அகற்ற வேண் டும் என்று பல ஆண்டுகளாக போராட் டங்களில் ஈடுபட்டனர்.
ஆனால், சுங்கச்சாவடி அகற்றப் படாமல், திருமங்கலம் சுற்றுவட்டார மக்களின் வாகனங்கள் மட்டும் கட்டணம் செலுத்தாமல் அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு திருமங்கலம் பகுதி மக்கள் கட்ட ணமின்றி செல்லும் அனுமதி திடீரென ரத்து செய்யப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், கடந்த ஒரு வாரமாக போராட்டங்களில் ஈடுபட்டனர். அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா மற்றும் தேசிய நெடுஞ்சாலை, காவல்துறை அதிகாரிகள் 4 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு எட்டப்படாததால் ‘சுங்கச்சாவடி’ எதிர்ப்பு போராட்டக் குழு இன்று (ஜூலை 30) திட்டமிட்டபடி திருமங்கலத்தில் ‘பந்த்’ போராட்டம் நடத்தப்போவதாக அறி வித்தது.
» ஆக.16 முதல் புது படங்கள் தொடங்கக் கூடாது: தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம்
» 2024 மத்திய பட்ஜெட்டில் பள்ளிப் படிப்பு: கேள்வி உனது, பதில் எனது
இந்நிலையில் ‘சுங்கச்சாவடி’ எதிர்ப் புக் குழு நிர்வாகிகளையும், கிராம மக்களையும் ஆட்சியர் நேற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். அதன்படி, ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் தலைமையில் அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில் அதிகாரிகள் குழுவினர், சுங்கச்சாவடி எதிர்ப்புப் போராட்டக் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் விவரம் வருமாறு:
அமைச்சர் பி.மூர்த்தி: கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றுவது எதிர்காலத் திட்டம். இருந்தாலும், தற்காலிகமாக திருமங்கலம் பகுதி மக்களின் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்ற கோரிக்கை தொடர்பாக அரசின் தலைமைச் செயலர், தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்குநரிடம் பேசி, 2020-ம் ஆண்டு வரை என்ன நடைமுறையோ அதையே மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
பொதுமக்கள்: இப்படிதான் சொல்வார்கள், கடைசியில், புதிய விதிகளைக் கொண்டு வருவர். கப்பலூர் சுங்கச் சாவடியை நிரந்தரமாக அகற்ற வேண்டும்.
ஆட்சியர் சங்கீதா: கண்டிப்பாக கட்டணம் வசூல் செய்ய மாட்டார்கள். விரைவில், அதற்கான உத்தரவு வரும். சுங்கச்சாவடியை அகற்றுவது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.
பொதுமக்கள்: அப்படியென்றால், அதுவரை போராட்டம் தொடரும்.
அமைச்சர் பி.மூர்த்தி: கோரிக்கையை நிறைவேற்றிய பிறகு இப்படி சொல்வது நியாயம் அல்ல.
பொதுமக்கள்: 2020-ல் என்ன நடைமுறை என்று எங்களுக்கு தெரியாது. இது திருமங்கலம் தொகுதி மக்களின் பிரச்சினை. டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதி மக்களையும் கட்டணமின்றி அனுமதிக்க வேண்டும்.
அமைச்சர் பி.மூர்த்தி: திருமங்கலம் என்பதற்கான ஆதார் அட்டையைக் காட்டினால் போதும். அவர்கள் ‘சுங்கச்சாவடி’ யில் அனுமதிப்பர். அது ஆட்டோ, சரக்கு ஆட்டோ என்றாலும் அனுமதிப்பர். ஆதார் அட்டை இல்லாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.
பேச்சுவார்த்தையின்போது அமைச்சர், ஆட்சியரிடம் பொதுமக்கள் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூச்சல், குழப்பத்துடனேயே கூட்டம் நிறை வடைந்தது.
பின்னர், அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வணிகர்கள் சுங்கச்சாவடியை 60 கி.மீ. தொலைவில் வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை வைத்தனர். 2012-ல் இந்த சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது.
அன்று முதல் 2020-ம் ஆண்டு வரை திருமங்கலம் பகுதி மக்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்பட்டனர். கடந்த 3 ஆண்டுகளாக சில நேரங்களில் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பிரச்சினை ஏற்பட்டது.
இதற்கு நிரந்தரத் தீர்வாக 2020-ம் ஆண்டு வரை இருந்த நடைமுறையை பின்பற்ற முடிவு எடுக்கப்பட்டது. திருமங்கலம் பகுதி மக்கள் தங்கள் வாகனங்களில் சுங்கச்சாவடியில் 1 மற்றும் 10-வது வழித்தடத்தில் கட்டணமின்றி செல்லலாம் என்று கூறினார்.
திமுக-அதிமுக மோதலாக மாறிய சுங்கச்சாவடி பிரச்சினை: கூட்டத்தில் பங்கேற்ற திமுக நிர்வாகிகள், ‘தலைவரே (முதல்வர் ஸ்டாலின்) கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். அதைச் சொல்லி பொதுமக்கள் எங்களை திட்டுறாங்க’ என்று அமைச்சரிடம் ஆதங்கம் தெரிவித்தனர்.
அதேநேரம், அதிமுக ஆதரவாளர்கள், சுங்கச்சாவடியை அகற்றியே தீர வேண்டும் என்றனர். தற்போது கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் திமுக-அதிமுக மோதலாக உருவெடுத்துள்ளது.
அதை உறுதி செய்வதுபோல், சுங்கச்சாவடி பிரச்சினையில் அமைச்சர் தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொதுமக்கள், வணிகர்களைத் திரட்டி போராட்டம் நடத்துவது, அறிக்கை வெளியிடுவது என இப்பிரச்சினை நிரந்தரத் தீர்வு காணப்படாமல் நீடிக்கிறது.
திட்டமிட்டபடி இன்று ‘பந்த்’ - சுங்கச்சாவடி போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஹமீது கூறுகையில், ‘கடந்த19-ம் தேதி தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாகக் கூறி பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதில் 2020-ம் ஆண்டு நடைமுறையை பின்பற்றப் போவதாக சொல்கிறார்கள். அதுகுறித்து கடிதமோ, உத்தரவோ தர மறுக்கிறார்கள். அதனால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. திட்டமிட்டபடி இன்று போராட்டம் நடைபெறும்,’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago