வாடகை தாய் மூலம் குழந்தை பெற 60 வயது தம்பதிக்கு தகுதி சான்றிதழ்: உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: வாடகை தாய் மூலம் குழந்தை பெற நினைக்கும் 60 வயது தம்பிக்கு தகுதி சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த 60 வயது தம்பதி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: “எனக்கும், என் மனைவிக்கும் 1984-ம் ஆண்டில் திருமணம் நடந்தது.பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. டாக்டர்கள் பரிந்துரையின்பேரில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தோம். ஆனாலும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்து மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டோம். ஆனால் எங்கள் வயதை காரணம் காட்டி சான்றிதழ் வழங்க சுகாதார சேவை அதிகாரி மறுக்கிறார். எங்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்கும்படி உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி,“மனுதாரர் தந்தையாக வேண்டும் என விரும்புகிறார். இதற்கு இந்த தம்பதிக்கு வயது உள்ளிட்ட தகுதி இருக்கிறதா என்பது குறித்து நான் விவாதிக்க விரும்பவில்லை. எனவே, வாடகைத்தாய் ஒழுங்குமுறை சுகாதார சேவை இணை இயக்குநர் 4 வாரத்தில் மனுதாரர் தம்பதிக்கு உரிய தகுதி சான்றிதழை வழங்க வேண்டும்” என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE