புதுச்சேரி - பாண்டி மெரினாவில் புதைக்கப்பட்ட ஒட்டகத்தின் உடலைத் தோண்டி எடுத்து உடற்கூராய்வு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி - பாண்டி மெரினா கடற்கரையில் புதைக்கப்பட்ட ஒட்டகத்தின் உடலை இன்று தோண்டி எடுத்து உடற்கூராய்வு செய்தனர். அதன் பின்னர் உடற்பாகங்கள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

புதுச்சேரி வம்பாக்கீரப்பாளையம் பாண்டி மெரினா கடற்கரையில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் சுற்றுலா நோக்கில் வளாகமாக அமைக்கப்பட்டது. வணிக வளாகத்திலுள்ள கடைகள் வாடகைக்கு விடப்பட்டு, அதன் பத்து ஆண்டுகளுக்கான பராமரிப்பு தனியார் நிறுவனத்துக்கு தரப்பட்டது. இங்கு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ஒட்டகம், குதிரைகள் தனியாரால் நிறுத்தப்பட்டுள்ளன. இங்கு 4 ஒட்டகங்களும் 2 குதிரைகளும் இருந்தன. அவற்றில் குழந்தைகள், பெரியவர்கள் கட்டணம் செலுத்தி ஏறி சவாரி செய்வது வழக்கமாகும். இந்த நிலையில், அங்கிருந்த 13 வயது ஆண் ஒட்டகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதித்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து கடற்கரை மணலில் ஒட்டகத்தின் உடலைப் புதைத்துள்ளனர். ஆனால், கடற்கரையில் சடலம் புதைக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து, ஒதியஞ்சாலை போலீஸார் இதுகுறித்து விசாரித்தனர். பின்னர் வட்டாட்சியர் பிரதீவி முன்னிலையில் ஒட்டகம் புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், அரசு கால்நடைத் துறை மூலம் ஒட்டகத்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தவும் கோரிக்கை எழுந்தது.

இதனையடுத்து, குருமாம்பேட் கால்நடை மருத்துவக் கல்லுாரி நோய் குறியியல் துறை தலைவர் குமார், பேராசிரியர் அவிநாஷ் லக்கார்னி, கால்நடை மருத்துவர் குமரன் ஆகியோர் முன்னிலையில், ஒதியஞ்சாலை காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில், புதைப்பட்ட ஒட்டகத்தின் உடல் இன்று தோண்டி எடுக்கப்பட்டது. அதன்பின் அங்கேயே ஒட்டத்தின் உடலானது உடற்கூராய்வுக்கு உட்படுத்தப்பட்டது. பிறகு ஒட்டத்தின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டன. அவை விரைவில் ஆய்வு செய்யப்பட்டு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கால்நடை மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE