இலங்கை சிறையில் உள்ள 42 தமிழக மீனவர்கள் வழக்கில் நாளை தீர்ப்பு

By எஸ். முஹம்மது ராஃபி


ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 83 தமிழக மீனவர்களில் 42 மீனவர்களுக்கு நாளை தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து கடந்த ஜூன் 15-லிருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். இந்த ஒன்றரை மாதத்தில் 10 விசைப்படகுகள், 4 நாட்டுப் படகுகள் என மொத்தம் 14 படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 83 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். 83 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்களின் கைது நடவடிக்கையின் போது, இலங்கை ரோந்துப் படகிலிருந்த அந்நாட்டு கடற்படை வீரர் ரத்நாயக்க, கைப்பற்றப்பட்ட மீனவர்களின் படகில் தவறி விழுந்து காயமுற்றார். அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். இது தொடர்பாக மல்லாகம் நீதிமன்றம் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இன்று ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், நம்புதாளையைச் சேர்ந்த 25 நாட்டுப் படகு மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 17 விசைப்பட மீனவர்கள் என 42 மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஸ்கரன், மீனவர்கள் 42 பேருக்கும் நாளை தீர்ப்பு வழங்கப்படும், என அறிவித்தார்.

முன்னதாக, ஜூலை 23 அன்று சிறைபிடிக்கப்பட்ட 22 ராமேசுவரம் மீனவர்களில் 3 பேருக்கு காசநோய் அறிகுறிகள் கண்டறிப்பட்டிருப்பதால் அவர்களை நாளை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் அவர்களது மருத்துவப் பரிசோதனை அறிக்கையுடன் சிறை நிர்வாகம் ஆஜர்படுத்தினால் ஒரே நேரத்தில் 64 மீனவர்களும் நாளை விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE