“யானைகளால் பயிருக்கும், மனித உயிர்களுக்கும் பாதுகாப்பில்லை” - கோவை ஆட்சியரிடம் எஸ்.பி.வேலுமணி மனு

By இல.ராஜகோபால்

கோவை: “கோவையில் யானைகளால் பயிர்களுக்கும் மனித உயிர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. யானைகளிடம் இருந்து மக்களையும் பயிர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஆட்சியரிடம் அதிமுக கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி மனு அளித்துள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் விரலியூர் பகுதியில் காட்டு யானை தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, "மாவட்ட ஆட்சியரை பார்க்க வரும் பொதுமக்களை காவல் துறையினர் நுழைவாயில் பகுதியில் தடுத்து நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தொண்டாமுத்தூர் பகுதிகளில் தொடர்ந்து யானைகள் தொல்லை இருந்து வருகிறது. தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருவதால் பயிருக்கும் பாதுகாப்பில்லை, மனித உயிர்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு விரலியூர் பகுதியில் பூசாரி ஒருவரை யானை தாக்கியுள்ளது. யானையை விரட்டும் முயற்சியில் இருவர் காயமடைந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலையில் யானை மேலும் மூவரை தாக்கியுள்ளது. வனத் துறையினர் இரவே யானையை விரட்டி இருந்தால் காலையில் இந்தச் சம்பவம் நடந்திருக்காது. வனத் துறையினர் பெயரளவுக்கு செயல்படுகிறார்களே தவிர முறையான நடவடிக்கை எடுப்பதில்லை, அதற்காக நிதியும் ஒதுக்கப்படுவதில்லை.

இன்று ஒரு உயிர் போய்விட்டது, ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்களுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இனிமேல் இதுபோன்று நடக்கக் கூடாது. அகழி வெட்டினாலும் மின்வேலி அமைத்தாலும் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். இல்லையென்றால் யானைகள் மீண்டும் வர தொடங்கிவிடும். பயிர் சேதம் ஏற்படும்போது விவசாயிகளுக்கு போதுமான நிவாரணம் வழங்கப்படுவதில்லை. வனத் துறையினர் இனியாவது மெத்தனப் போக்கை கைவிட்டு யானைகளிடம் இருந்து மக்களையும் பயிர்களையும் பாதுகாக்க வேண்டும்" என்று எஸ்.பி.வேலுமணி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE