பதிவெண் இல்லாமல் அதிவேகத்தில் செல்லும் மணல் லாரிகளால் ஏரல் பகுதியில் விபத்து அபாயம்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் பின்பக்கம் பதிவெண் இல்லாமல் இயக்கப்படும் மணல் லாரிகள் அதிவேகத்தில் செல்வதால் விபத்து அபாயம் நிலவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கனமழை காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் தாலுகா பெரும் பாதிப்புக்கு உள்ளானது. விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பல கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்திய மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து மீண்டு வர முடியாமல் இன்று வரை அவர்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழக அரசு உத்தரவுப்படி விளைநிலங்களை மேம்படுத்தும் வகையில் குளங்களில் உள்ள வண்டல் மண் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களது நிலத்துக்கான ஆவணங்களுடன் வருவாய்த்துறையில் விண்ணப்பம் செய்கின்றனர். இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்து, விண்ணப்பதாரரின் குடியிருப்பு அருகில் உள்ள குளங்களில் இருந்து மண் எடுத்துக்கொள்ள நீர்வளத் துறையினர் விவசாயிகளுக்கு அனுமதி சீட்டு வழங்குகின்றனர். இவ்வாறு எடுக்கப்படும் வண்டல் மண் விண்ணப்பதாரரின் விலை நிலங்களை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறதா என்பதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

நம்பர் பிளேட் இல்லை: இந்நிலையில், குளங்களில் இருந்து வண்டல் மண் எடுத்து செல்லும் லாரிகளின் பின்புறம் பதிவெண் இல்லாமல் இயக்கப்படுவது பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆழ்வார் திருநகரி, சாயர்புரம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் பின்பக்கம் பதிவெண் இல்லாமல் இயக்கப்படும் மணல் லாரிகள் அதிவேகத்தில் செல்வதால் விபத்து அபாயம் நிலவுவதாக பொதுமக்களும், இதர வாகன ஓட்டிகளும் புகார் தெரிவிக்கின்றனர்.

நம்பர் பிளேட்களில் பதிவெண்களை தவிர பிற வாசகங்கள் இடம்பெறக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், மணல் லாரிகளின் பின்பக்கத்தில் நம்பர் பிளேட்கள் எதுவும் இன்றி இயக்கப்பட்டு வருவது நீதிமன்ற உத்தரவுகளை மீறுவதாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பதிவெண் இல்லாமல் இயக்கப்படு மணல் லாரிகளால் விபத்து ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அதை அருகில் உள்ளவர்களால் கண்டறிய முடியாத நிலை ஏற்படும். மேலும், மணல் லாரிகள் குறிப்பிட்ட அளவைவிட தாண்டி அதிக பாரத்தோடு சென்று சாலைகளை சேதப்படுத்தும் நிலை ஏற்பட்டால் அது குறித்து புகார் தெரிவிக்கவும் முடியாமல் போகும்.

எனவே, பதிவெண் இல்லாத மணல் லாரிகளுக்கு நீர்வளத் துறையினர் அனுமதி வழங்கக் கூடாது. அவ்வாறு இயக்கப்படும் மணல் லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE