சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவு: அமைச்சர் கே.என்.நேரு

By கி.கணேஷ்

சென்னை: “செப்டம்பர் மாதத்துக்குள் மழைநீர் வடிகால் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளை ஒரு மாதத்துக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.” என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று (ஜூலை 29) காலை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், மாநகராட்சிகள், நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் நேரு, “வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக அனைத்துப் பணிகளையும் முடிக்க வேண்டும். நீர்நிலைகளில் காணப்படும் ஆகாயத் தாமரையை முழுமையாக அகற்ற வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளை ஒரு மாதத்துக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆறு தொடர்பான பணிகள் முடிய 8 மாதம் உள்ளது. தற்போது வரை 80 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.மெட்ரோ ரயில் நிறுவனத்துடன், சென்னை மாநகராட்சி இணைந்து பல்வேறு பணிகளை செய்து வருகிறது.

மெட்ரோ ரயிலுக்காக தோண்டிய பள்ளத்தில் உள்ள தண்ணீரை அவர்கள் எடுத்து வருகின்றனர். தேவைப்படும் இடங்களில் மோட்டார்கள் வைத்தும் அகற்றப்படும். வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக அதாவது செப்டம்பர் மாதத்துக்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE