வாலாஜா- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை தேவை: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: கன்னித்தீவு கதையாக நீளும் வாலாஜா- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலைப் பணிகளை 6 மாதங்களில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அந்த சாலையில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதையும் நிறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வாலாஜா இடையிலான பகுதியை 6 வழிச்சாலையாக மாற்றுவதற்கான பணிகள் ஏற்கனவே பல ஆண்டுகள் தாமதமடைந்துள்ள நிலையில், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காரைப்பேட்டை இடையே சாலை விரிவாக்கப் பணிகள் கைவிடப்பட்டுள்ளன. இதனால்ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வாலாஜா சாலைப் பணிகள் மேலும் தாமதமடையக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

சென்னை & பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச் சாலையாக அமைக்கப்பட்ட நிலையில், சென்னை மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான 93 கி.மீ நீளச் சாலை 4 வழிப்பாதையாகவும், அதிக விபத்திகள் நிகழும் சாலையாகவும் உள்ளது. இது தொடர்பாக பல அறிக்கைகளை வெளியிட்டதுடன், மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு தொடர்ந்து கடிதங்களையும் எழுதினேன். அதன்பயனாக இச்சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கும் திட்டம் 2014-ஆம் ஆண்டில் அறிவிக்கப் பட்டு, ஒப்பந்தங்கள் விடப்பட்டு 2018-ஆம் ஆண்டின் இறுதியில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

அடுத்த 3 ஆண்டுகளில் இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு, 2021 ஆம் ஆண்டில் போக்குவரத்துக்கு சாலை திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 6 ஆண்டுகள் நிறைவடைந்தும் கூட பணிகள் இன்னும் முடிவடையவில்லை. மொத்தம் 98 கி.மீ. நீள சாலையில், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்ட மதுரவாயல் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான 23 கி.மீ நீள சாலை விரிவாக்கப் பணிகள் முடிவடைந்துவிட்டன.

மீதமுள்ள 70 கி.மீ நீள சாலையில், காரைப்பேட்டை முதல் வாலாஜா வரையிலான 36 கி.மீ நீளத்திற்கான பணிகள் 75% நிறைவடைந்து விட்டன. மீதமுள்ள பணிகளும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடைந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், காரைப் பேட்டை மற்றும்ஸ்ரீபெரும்புதூர் இடையிலான பணிகள் இதுவரை 57% மட்டுமே நிறைவடைந்திருக்கும் சூழலில் தான் சாலை விரிவாக்கப்பணிகள் ஒப்பந்ததாரரால் முன்னறிவிப்பின்றி கைவிடப்பட்டிருக்கின்றன.

நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான நிலக்கரி சாம்பல் இலவசமாக கிடைக்காதது தான் திட்டப்பணிகள் கைவிடப்பட்டதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் நிலக்கரி சாம்பலில் 20 விழுக்காட்டை இலவசமாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட ஆணை, 2022&ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டது.

அதன்பின் 6% நிலக்கரி சாம்பலை இலவசமாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த ஆணையும் முறையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால், நிலக்கரி சாம்பலை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தினால் திட்டச் செலவு அதிகரித்து விடும் என்பதால் தான், திட்டப்பணிகளை ஒப்பந்ததாரர் திடீரென கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்கள் தான்.

காரைப்பேட்டை & ஸ்ரீபெரும்புதூர் இடையிலான பணிகள் ஏற்கனவே தாமதமாக நடைபெற்று வருகின்றன. திட்டப்பணிகள் நிறுத்தப்பட்டு விட்ட நிலையில், அதற்கான புதிய ஒப்பந்தத்தை கோரி, நிறைவு செய்வதற்கு இன்னும் 4 முதல் 5 மாதங்கள் ஆகலாம். அதன் பிறகு பணிகள் தொடங்கப்பட்டால் கூட, அப்பணிகள் நிறைவடைய குறைந்தது இன்னும் 2 ஆண்டுகளுக்கு மேலாகும் என்று கூறப்படுகிறது. 2021 ஆம் ஆண்டில் நிறைவடைந்திருக்க வேண்டிய பணிகள், 2024 ஆம் ஆண்டை கடந்தும் கன்னித்தீவு கதையைப் போல் அனுமதிக்க முடியாது. சாலைப் பணிகள் தாமதமாவதால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.

வாலாஜா - ஸ்ரீபெரும்புதூர் இடையிலான சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கிய பிறகு 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான மூன்றரை ஆண்டுகளில், அதாவது 1277 நாட்களில் இந்த பகுதியில் மொத்தம் 786 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அதாவது ஒன்றரை நாட்களுக்கு ஒரு விபத்து நிகழ்ந்திருக்கிறது. இந்த விபத்துகளில் 79 பேர் உயிரிழந்துள்ளனர்; 761 பேர் படுகாயமடைந்து உயிர் பிழைத்துள்ளனர். 2022- ஆம் ஆண்டுக்கு பிந்தைய புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் விபத்து அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

வாலாஜா - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் தாமதமடைந்து வருவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது. முழுமையான சுங்கக்கட்டணம் வசூலிக்கவும் தடை விதித்தது. அதன்பிறகும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும், ஒப்பந்ததாரர்களும் பாடம் கற்றுக் கொள்ளாதது வருத்தமளிக்கிறது.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும், தமிழ்நாடு அரசும் இந்தத் திட்டப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்களை அழைத்துப் பேசி சாலை விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்தி, அதிகபட்சமாக அடுத்த 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்க வேண்டும். அதுவரை அந்த சாலையில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதையும் நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்